உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழியக்கம், பாரதிதாசன்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

தமிழியக்கம்

தமிழறியான் தமிழர் நிலை
    தமிழர்நெறி தமிழர்களின்
       தேவை, வாழ்வு
தமையறிதல் உண்டோ எந்
    நாளுமில்லை! தமிழறியான்
       சுவையே காணான்!
சுமைசுமையாய் அரசியல்சீர்
    சுமந்தவர்கள் இதுவரைக்கும்
       சொன்ன துண்டோ
தமிழ்க்கல்வி தமிழ் நாட்டில்
    கட்டாயம் என்பதொரு
       சட்டம் செய்ய! 39

ஆங்கிலநூல் அறிவுக்குச்
    சான்றிருந்தால் அதுபோதும்
        அலுவல் பார்க்க!
ஈங்குள்ள தமிழர் நெறி
    அவர்க்கென்ன தெரிந்திருக்கும்?
        இதுவு மன்றி,
மாங்காட்டுச் செவிடனெதிர்
    வடிகட்டி ஊமையரை
        வைத்த தைப்போல்
தீங்கற்ற தமிழறியான்
    செந்தமிழ்நாட் டலுவலின்மேற்
        செல்ல லாமோ? 40