௧௨. கோயிலார்
உயிர்போன்ற உங்கள்தமிழ்
கடவுளுக்கே உவப்பாதல்
இல்லை போலும்!
உயிர்போன்ற உங்கள்தமிழ்
உரைத்தக்கால் கடவுளதை
ஒப்பார் போலும்!
பயிரழிக்கும் விட்டிலெனத்
தமிழ்மொழியைப் படுத்தவந்த
வடம றைதான்
செயிர்தீர வாழ்த்துதற்கும்
தேவையினைச் சொல்லுதற்கும்
உதவும் போலும்! 56
மடிகட்டிக் கோயிலிலே
மேலுடையை இடுப்பினிலே
வரிந்து கட்டிப்
பொடிகட்டி இல்லாது
பூசியிரு கைகட்டிப்
பார்ப்பா னுக்குப்
படிகட்டித் தமிழரெனப்
படிக்கட்டின் கீழ்நின்று
தமிழ்மா னத்தை
வடிகட்டி அவன்வடசொல்
மண்ணாங்கட் டிக்குவப்பீர்
“மந்தரம்” என்றே. 57
காற்செருப்பைப் பிறனொருவன்
கழிவிடத்தில் தள்ளிடினும்
பொறாத உள்ளம்,
மேற்படுத்தும் எவற்றினுக்கும்
மேற்பட்ட தன்மொழியைத்
தமிழைத்-தீயோர்
போற்றுவதற் குரியதொரு
பொதுவினின்று நீக்கிவைத்தால்
பொறுப்ப துண்டோ ?
வேற்றுவரின் வடமொழியை
வேரறுப்பீர் கோயிலிலே
மேவி டாமே. 58