உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழியக்கம், பாரதிதாசன்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௮. கூத்தர்

வாய்ப்பாட்டுப் பாடிடுவோர்
    பெரும்பாலோர் வண்டமிழ்க்குத்
         தீமை செய்தார்!
போய்ப்பாரீர் படக்காட்சி!
    போய்ப்பாரீர் நாடகங்கள்!
         பொன்போல மிக்க
வாய்ப்பாகத் தமிழ் ஒன்றே
    பேசுகின்றார் பாடுகின்றார்
         வாழ்க அன்னார்!
தாய்ப்பாலில் நஞ்செனவே
    தமிழில் வடமொழிசேர்த்தார்!
         தவிர்தல் வேண்டும்!86

தமிழ்ப்புலவர் தனித்தமிழில்
    நாடகங்கள் படக்கதைகள்
         எழுத வேண்டும்
தமிழ்ப்பகைவர் பார்ப்பனர்கள்
    நாடகத்தில் படக்கதையைத்
         தமிழர் எல்லாம்
இமைப்போதும் பார்த்திடுதல்
    இனியேனும் நீக்கிடுதல்
         வேண்டும், யாவும்
அமைப்பானும் செந்தமிழன்
    அதைக்காண்பா னுந்தமிழன்
         ஆதல் வேண்டும். 87

ஆடுகின்ற மெல்லியலாள்
    அங்கையினைக் காட்டுவது
         பொருள் குறித்தே
நாடிடும் அப் பொருள்குறிக்கும்
    சொல் தமிழாய் இருப்பதுதான்
         நன்றா? அன்றித்
தேடிடினும் பொருள் தோன்றாத்
    தெலுங்குவட சொல்லாதல்
         நன்றா? பின்னால்
பாடுகின்றார் நட்டுவனார்
    பைந்தமிழா? பிறமொழியா?
         எது நன் றாகும்? 88