பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறியீடு


குறியீடு என்ற சொல் ஆங்கிலத்தில் ‘Symbol' என்ற சொல்லுக்கு இணையாக அமைகிறது. ‘சிம்பல்' என்னும் ஆங்கிலச் சொல், ஒன்று சேர் (to put together) என்னும் பொருளுடைய சிம்பலேன் (Symballein) என்னும் கிரேக்க வினைச் சொல்லிலிருந்தும்,சின்னம் (mark), அடையாளம் (token), குறி (sign) என்னும் பொருளுடைய சிம்பலன் (Symbolon) என்னும் பெயர்ச் சொல்லிலிருந்தும் தோன்றிய சொல்லாகும். சேர்க்கை காரணமாக மற்றொன்றை உணர்த்தும் பொருள் சிம்பல் என அழைக்கப்படலாயிற்று. (புதுக்கவிதையில் குறியீடு, ப2). Sign, Symbol, Symbolism ஆகிய ஆங்கிலச் சொற்கள் முறையே குறி, குறியீடு, குறியீட்டியம் என்னும் பொருளுடன் தமிழில் வழங்கப் பெறுகின்றன.

தமிழ் லெக்சிகன் குறியீடு என்பதற்குக் 'குறியாக இட்டாளும் பெயர்' எனவும் (தொகுதி - 2, ப.1050), குறி என்பதற்குக் ‘குறியீடு' (Symbol), அடையாளம், இலக்கு, முன்னறிந்து கூறும் ‘நிமித்தம்' எனவும் (தொகுதி - 2, ப. 1047) பொருளுரைக்கிறது. க்ரியாவின் தற்காலத் தமிழகராதி குறி என்பதற்கு 'இன்ன இனம் என அறிவதற்கான அடையாளம் மற்றும் எதிர்கால நிகழ்ச்சியை அல்லது காணாத பொருளின் இருப்பை ஏதேனும் ஓர் அடையாளத்தின் அடிப்படையில் கூறும் அறிவிப்பு' எனவும் (ப.339), குறியீடு என்பதற்கு 'அடையாளம், சின்னம், ஒரு கருத்துக்குப் பதிலாக வழங்குவது மற்றும் ஒரு கருத்தை வெளியிடும் சாதனம்' எனவும் பொருளுரைக்கிறது. சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ் அகராதி ‘Symbol' என்பதற்குச் சின்னம், பொதுக்குறியீடு, அடையாளம், இடுகுறி, குறியீடு, நினைவுக் குறிப்புச் சின்னம், பொது நிலைக் குழூஉக்குறி, தனித்துறைக் குழூஉக்குறி என்று பொருள் தருகிறது (ப1047), ‘ஒன்றிற்காக நிற்கும் வேறொன்று ஒன்றின் சார்பாக நிற்கும் மற்றொன்று அல்லது வேறொன்றைச் சுட்டி நிற்கும் ஒன்று' என்று ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி குறியீட்டுக்கு விளக்கம் தருகிறது (Vol. II, p.3206).

‘குறியீடு என்ற சொல், பெயர் - பெயரிடுதல் என்ற பொருளில் தமிழுக்கு ஏற்கெனவே பழக்கமானது' (இலக்கியவியல் கோட்பாடும் அணுகுமுறையும், ப.187), 'சொற்பொருள் நிலையில், குறியிடுதல் - குறியீடு என்பனவற்றுடன் இடுகுறி என்பதும் இணைத்துக் கருதத்தக்கது. குறியீடு எனும் பொருண்மை, குறி, அடையாளம் என்ற பொருள் நிலையிலும், குறிப்பாகக் கருத்தை - செய்தியைத் தரும் ஒரு முறை என்ற வெளியீட்டு நிலையிலும் தமிழிலும், தொல்காப்பியம் - சங்க இலக்கியம் முதல் காணப்பெறுகின்றது (மேற்படி ப.188). வடமொழியில் கூறப்பெறும் 'தொனி' என்ற சொல் குறியீடு சார்ந்த பொருளுடையது. சொல் வெளிப்படைப் பொருளுக்கு அப்பால் குறிப்பாய்ப் பொருளுணர்த்தும் ஆற்றலை ‘வியஞ்சனை' (குறிப்பாற்றல்) என்றும், குறிப்பாய்ப் பொருளுணர்த்தும் சொல்லை ‘வியஞ்சகம்' (குறிப்புச் சொல்) என்றும், குறிப்புப் பொருளை 'வியங்கியம்' என்றும் வடமொழியில் குறிப்பர்.

‘குறி, குறியீடு என்ற சொற்கள் ஒன்று போல இருந்தாலும் நுட்பமான பொருள் வேறுபாட்டைக் கொண்டவை. குறி என்பது ஒன்றைச் சுட்டி இனம் கண்டு கொள்வதற்கான அடையாளச் சின்னமாகும். குறியீடு என்பது மற்றொரு பொருளுக்காக அப்பொருளின் இடத்தில் தானே நிற்பது ஆகும்' (கவிக்கோக்கவி, ப.43). ‘தமிழ் இலக்கியத்தில் கருதப்பெறும் குறியியல் என்ற தமிழ்ச் சொல்லுக்குச் சமமான இரண்டு சொற்கள் உள்ளன. ஒன்று

சீமியாலஜி (Semiology), இன்னொன்று சீமியாடிக்ஸ் (Semiotics). சீமியாலஜி என்ற சொல்

xi