பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Sign என்கிற ஆங்கிலச் சொல்லுக்குச் சமமான Semeion என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து தோன்றியது' (தமிழும் குறியியலும், ப.1), குறியீடு என்ற சொல்லிலிருந்து குறியீட்டியம் என்ற சொல் தோன்றியதாகும்.

வரையறை

(ஒரு பொருளைக் குறிப்பிட்டு அதன் வாயிலாக அதனுடன் தொடர்புள்ள வேறொரு பொருளைக் குறியிட்டுக் காட்டுவதே குறியீடு எனப்படுகிறது. ‘குறியீடு என்பது ஏதேனும் ஒன்று பிறிதொன்றிற்காக நிற்பது; பிறிதொன்றைப் பிரதிபலிப்பது; பிறிதொன்றை உட்கருத்தாய் உணர்த்துவது' (பாரதியும் வள்ளத் தோளும் ஒப்பியல் பார்வை, ப258). ஒன்றை மற்றொன்றில் குறிக்கும் போது, அந்த மற்றொன்றே குறியீடு எனப்படுகிறது. ‘குறியீடு என்பது ஒரு பொருளுக்குப் பதிலாக மற்றொரு பொருளைப் பதிலியாகக் காட்டுவதாகும்' (இலக்கிய இஸங்கள், ப.71). தமிழில் குறி என்ற சொல் குறியீட்டுடன் தொடர்புடையது. குறி என்பது ஒரு பொருளைச் சுட்டிக்காட்டுவது; குறியீடோ ஒரு பொருளுக்காகத் தானே அவ்விடத்தில் சென்று நிற்பதாம்.)

‘குறி, குறியிடுதல் என்ற அடிப்படையில் குறியீடு எனும் சொல் உருவாகியுள்ளது. அடிப்படையாக, ஒன்றோடொன்று ஒத்துச் செல்லும் இரண்டு பகுதிகளையுடைய அடையாளப் பொருளைச் சுட்டியது. பின்பு, பருவடிவாலான ஒரு குறி அல்லாத படிமம், வேறேதேனும் அருவப் பொருளையோ கருத்தையோ, மரபு, ஒப்புமை, உருவகம் ஆகிய ஒன்றால் உணர்த்துவதைச் சுட்டியது. நேரடியாக அன்றி வேறொரு ஊடகம் வாயிலாகத் தரும் வெளியீட்டு முறையாகவும் இது அமைகின்றது. இவ்விளக்கங்கள் குறி, குறிப்பு என்பனவற்றை சிம்பல் எனும் குறியீட்டோடு நெருங்கச் செய்கின்றன' (தொல்காப்பியம் எழுத்தும் கோட்பாடுகளும், ப.290).

‘குறிகளின் அர்த்தங்களைப் பற்றிய அறிவியலைக் குறியியல் எனலாம். குறியியல் அர்த்தம் தரும் மிகச்சிறிய கூறு குறி (Sign) ஆகும். இந்தக் குறிகள் இணையும் விதிகளையும் அவை தரும் புதை அர்த்தங்களையும் (Connotative meanings) குறியியல் வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு குறியும் குறிப்பான், குறிப்பீடு என்ற இரு கூறுகளால் பிணைக்கப்பட்டது. குறிப்பான் (signifier) என்பது ஒரு சொல்லின் ஒலி / வரி வடிவம் ஆகும். குறிப்பீடு (signified) என்பது அச்சொல் குறிக்கும் கருத்துக் கோவை ஆகும். குறிப்பானுக்கும் குறிப்பீட்டிற்கும் உள்ள அமைப்புறவுகள்தாம் குறியை உருவாக்குகின்றன. குறிப்பானுக்கும் குறிப்பீட்டிற்கும் இடையேயான உறவு தன்னிச்சையானது' (நோக்கு, தொகுதி - 2, ப. 84). ‘ஒரு சொல் அது குறிக்கும் பொருளுக்குப் பிரதியீடாகப் பயன்படுகிறது. எனவே சொல் குறியாகிறது. மொழி என்பது இதனால் குறிகளின் ஒழுங்கமைப்பாகிறது. இதே போல்தான் சினிமாவும் குறிகளின் ஒழுங்கமைப்பாக உள்ளது. திரையில் ஒரு பிம்பம் அதன் நிஜப் பொருளுக்குப் பிரதியீடாய் நிற்கிறது. எனவே பிம்பம் குறியாகிறது' (மேற்படி, ப.87),

‘குறி என்பது, ஒரு பொருள், யாரோ ஒருவருக்கு, ஏதோ ஒன்றாக, ஏதோ ஒரு முறைமையில், விளங்குவதாகும். குறி (sign) என்பது ஒரு பொருள் (object) பற்றியும், ஒரு பிரதிநிதித்துவம் (interpretent) பற்றியும் விளக்குகிறது. இவை மூன்றின் உறவில் (செயல்பாட்டில்) தோன்றுவதுதான் குறிச்செயல்பாடு அல்லது குறிவயமாதல் (Semiosis)' (தமிழும் குறியியலும், ப.2). 'ஒப்புமைச் சிந்தனையானது மொழிமூலம் வெளிப்படுகையில் மொழி சில அடையாளங்களைப் பயன்படுத்துகிறது. அந்த அடையாளங்களே குறிகள் (signs) ஆகும்' (மேற்படி, ப.11).

'உளப்பகுப்பாய்வுக் கோட்பாட்டடிப்படையில் நோக்கும் போது குறியீடு என்பது நனவிலியின் பிரதிநிதியாக / உண்மையின் பொய் வடிவமாக வெளிப்படுகிறது. வெளிப்பட்ட

xii