பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

( இலக்கியத்திற்கு அழகு சேர்க்கின்ற உத்தியாகக் குறியீடு பயன்படுகிறது. ‘குறியீடுகள் உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் துல்லியமாக வெளிச்சம் பாய்ச்சிக் காட்டுகின்றன என்று அறிஞர்கள் குறிக்கின்றனர். கருத்து வெளிப்பாட்டிற்குச் சுதந்திரம் எப்போதெல்லாம் வரலாற்றில் மறுக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் குறியீடு முதன்மை உத்தியாகப் பயன்பட்டு வருகிறது. நுண்ணிய கருத்துகளைச் சுருங்க உரைக்க ஆற்றல் வாய்ந்த உத்தியாகக் குறியீடு உள்ளது. இந்நிலையில் நேரடியாகச் சொல்லும் கூற்றால் அதனோடு தொடர்புடையவர்கள் மனம் புண்படாமல் இருக்க இக்குறியீடு பெரிதும் உதவுகிறது' (மேற்படி, 1.45). வெளிப்படக் குறிக்காத குறியீட்டின் அழகு சிறப்புடையதாகும். தேவையற்ற வெற்றுச் சொற்களைத் தவிர்த்துக் கவிதைக்கு இறுக்கத்தையும் செறிவையும் ஏற்படுத்துவதற்குக் காரணமாகிறது. இவ்வுத்தி மூலம் கவிதைப் பொருளை நேரடியாகச் சொல்லாமல் குறிப்பாகக் காட்டுவதில் கவித்துவம் மிளிர்கிறது' (மேற்படி, ப.46) (குறியீடு பலதளங்களுக்குப் பொருள் தரும் பன்முக ஆற்றல் உடையது. ‘சுருக்கம், பொருள் புலப்பாடு, சக்திமிக்க வெளிப்பாடு ஆகிய காரணங்களால் மக்கள் வாழ்க்கையில் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன' (நோக்கு, ப.77), 'அகத்திற்கு அகப்படாத எண்ணங்களைக் கருத்துகளைச் சொல்வதற்குக் குறியீடுகள் துணைசெய்கின்றன. அகமனவாழ்வை வெளியிடவும் மறைக்கவும் குறியீடுகள் பயன்படுகின்றன. பொய்மை உணர்ச்சியும் மிகை உணர்ச்சியும் கவிதையில் இடம்பெறுவதைக் குறியீடுகள் தடைசெய்கின்றன' (மேற்படி, ப.82).

'குறியீட்டுக் கவிதையின் அடிப்படைப் பயனாக, ஒரு குறிப்பிட்ட மனநிலையை வருவித்தல் (தட்டி எழுப்புதல்) என்பதும் சுட்டப் பெறுகின்றது. ஒரு கருத்தை விளக்குதல்,அதனை ஏற்புடையதாகச் செய்தல், தப்பித்தல், செயலற்று அழுந்திக் கிடக்கும் அனுபவங்களைத் தட்டியெழுப்புதல், அணி அல்லது வெளியீடு ஆதல் ஆகிய பலவும் குறியீட்டின் பயன்பாடாகும்' (இலக்கியவியல் கோட்பாடும் அணுகுமுறையும், ப.192). 'கவிதையில் இடம்பெறும் சொற்களுக்கு நேரடியாகவோ சார்பாகவோ அமைந்திருக்கும் பொருளை அக்கவிதையினின்றும் வெகு தொலைவுக்கு எடுத்துச் செல்வதற்குக் குறியீட்டுக் கலைத்திறன் பெரிதும் பயன் படுகின்றது' (திறனாய்வுக் கட்டுரைகள், ப9) மனித வாழ்வில் அமைந்து கிடக்கும் அவல நிலைகளையும் இயற்கையின் ஊடாக அமைந்து கிடக்கும் புதிர்களையும் குறியீட்டுக் கவிதைகள் வெளிப்படுத்துகின்றன மேற்படி, ப.14). அங்கதமாய்க் கூறவும் குறியீடுகள் பயன்படுத்தப் படுகின்றன. குறியீடு கவிதையை வளப்படுத்துகிற பல செயல்களைப் புரிகிறது.

'மேனாட்டவர் பொதுவாகக் குறியீட்டியத்தை இருவகையாகப் பிரித்துக் காண்கின்றனர். உலகியல் அளவில் பயன்படும் குறியீட்டியத்தை ‘மானுடக் குறியீட்டியம்' (human symbolism) என்றும், அறிவெல்லை கடந்து ஆன்மீக உணர்வுகளைக் குறிப்பிடப் பயன்படும் குறியீட்டியத்தைக் ‘கடப்பியக் குறியீட்டியம்' (transcendental symbolism) என்றும் அவர்கள் வழங்குகின்றனர். பிரெஞ்சுக் குறியீட்டாளர் இரண்டாம் வகையைப் பயன்படுத்தினர்' (புதுக்கவிதையில் குறியீடு, ப. 59), ‘இலக்கியப் படைப்பில் பொதுவாகக் கவிஞர்கள் தொன்று தொட்டு வழங்கி வரும் குறியீடுகளைப் பயன்படுத்துவர்; அல்லது தம் தேவைக்கேற்பப் புதிய குறியீடுகளைப் படைத்துக் கொள்வர். எனவே குறியீடுகள் 'பொதுநிலைக் குறியீடுகள்' (public symbols), ‘தனிநிலைக் குறியீடுகள்' (local symbols) என இருவகையாக அமைகின்றன. இவற்றுள் பொதுநிலைக் குறியீடுகள், ‘இயற்கைக் குறியீடுகள்'

(natural symbols) என்றும் அழைக்கப்படுகின்றன. பொதுநிலைக் குறியீடுகளின் வகைகளாக 'அகிலத்துவ குறியீடுகளும் (universal symbols), ‘வழக்குக் குறியீடு'களும் (conventional symbols) கூறப்பெறுகின்றன. தனிநிலைக் குறியீட்டின் வகைகளாகத் 'தறுவாய்க் குறியீடு'களும் (contextual symbols), ‘மறிதரு குறியீடு’களும் (recurring symbols), ‘தற்குறியீடு'

xiv