பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களும் (private symbols) கூறப் பெற்றுள்ளன' (மேற்படி, பக். 68-69). மேலும் இக்குறியீடு தொன்மம், சமயம், வரலாறு, இலக்கியம், இடம், காலம் பற்றிய குறியீடு எனப் பலவகைகளில் விரிகிறது. ‘இப் புதுக்குறியீடுகள் மரபினை அடிப்படையாகக் கொண்டு அமையாமல் கவிஞர்களின் கற்பனை ஆற்றல்களாலும் படைப்புத் திறத்தாலும் சுய விளைச்சலில் உருவாக்கப்படுகின்றன' (கவிக்கோக்கவி, ப. 47).)

'இலக்கியத் திறனாய்வாளர் வேறு வகையிலும் குறியீடுகளைப் பிரித்துக் காட்டியுள்ளனர். வெல்லக்கும் வாரனும் மரபுக் குறியீடுகள், தற்குறியீடுகள், இயற்கைக் குறியீடுகள் என மூவகையாகப் பிரிப்பர். இயல்பாகவே குறியீடுகளாக அமைந்து ஆன்மிக மெய்மைகளை உணர்த்தப் பயன்படுவனவற்றைத் 'தூய குறியீடுகள்' (mere symbols) என்றும், கருத்துகளைப் புலப்படுத்தத் திட்டமிட்டு உருவாக்கப்படுவனவற்றைத் 'திட்டமிட்ட குறியீடுகள்' (calculated symbols) என்றும் சொல்வதுண்டு. சாட்விக் குறியீடுகளை, உலகியற் பயனுக்குதவும் 'மானுடக் குறியீடுகள்' (human symbols) என்றும், அறிவெல்லை கடந்த உண்மைகளை உணர்த்தும் ‘கடப்பியக் குறியீடுகள்'என்றும் வகைப்படுத்துகிறார். (கருத்துகளை மட்டும் உணர்த்துவன 'அறிவுநிலைக் குறியீடுகள்' (intellectual symbols) என்றும், உணர்வுகளைக் கிளர்வன 'உணர்வு நிலைக் குறியீடுகள்' (emotional symbols) என்றும் ஏட்ஸ் பிரித்துக் காண்கிறார்' (புதுக்கவிதையில் குறியீடு, ப. 69), 7

குறியீடு அமையும் முறை

(ஏதேனும் ஒருவகை உறவால் தோன்றுகிற ஒப்புறவு (association of similarity), ஒட்டுறவு (association of contiguity) என்ற இரு விதத்தில் குறியீடு அமைகிறது. ஒரு பொருளோடு மற்றொரு பொருள் ஒத்திருந்தால் இரண்டிற்கும் இடையே தோன்றும் உறவு ஒப்புறவு என்றும், இரண்டு பொருள்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக அமைவது ஒட்டுறவு என்றும் வழங்கப்படுகிறது. 'இவ்வொட்டுறவு மூன்று வகையில் ஏற்படலாம். சில பொருட்கள் இயற்கையாகச் சேர்ந்திருப்பன; சில செயற்கையாகச் சேர்த்து வைக்கப்படுவன; சில தற்செயலாக இணைவன. இம்மூவகை உறவாலும் பொருட்கள் குறியீடாகலாம்') (புதுக்கவிதையில் குறியீடு, ப. 3). ‘ஒப்புறவு, ஒட்டுறவு என இருவகையில் அமையும் குறியீடுகள் உருவ அருவ நிலையில் அமைந்து வருவதைக் காணலாம்' (கவிக்கோக்கவி, ப. 46),

'ஒப்புறவுக்குச் சில நுண்மையான ஒப்புமைகளும் காரணமாகலாம். ப்ராய்ட் (Sigmund Freud) சொல்லொப்புமையும் குறியீட்டிற்குக் காரணமாகலாம் என்கிறார். இரு பொருட்களுக்கிடையே உள்ள உள்ளார்ந்த பண்பொப்புமையையே குறியீடு அடிப்படையாகக் கொள்கிறது. விட்ஜென்ஸ்டீன் (Wittgenstein) என்பவருடைய, ‘பிரதிபலிப்புக் கொள்கை ' (theory of reflection) அடிப்படையில் குறியீட்டை விளக்கிய சுசேன் லேங்கர் (Susanne Langer) இரு பொருட்களிடையே காணப்படும் அமைப்பு முறையின் முழுமையான பொருத்தம் (congruence of logical structures) ஒன்றே குறியீட்டு உறவுக்கு இன்றியமையாதது என்கிறார் (புதுக்கவிதையில் குறியீடு, ப.4).('குறியீடு மற்றொன்றை உணர்த்துவதற்கு மூன்று வகையில் செயற்படுகிறது. குறியீடு மற்றொன்றிக்காக நிற்கலாம்; அல்லது மற்றொன்றின் பிரதிநிதியாகச் செயற்படலாம்; அல்லது மற்றொன்றைச் சுட்டிக் காட்டுவதோடு அமையலாம். சில குறியீடுகள் மற்றொன்றை (something else) உணர்த்தாமல், தம் பொருளோடு இன்னும் கூடுதலான பொருளை (something more) உணர்த்தும் (மேற்படி, ப.5),கருத்தியலானவற்றை (abstract) உணர்த்தப் பருப்பொருளைப்பயன்படுத்துவது என்பதே குறியீடு பற்றிய பொருட்களுள் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

ஏனெனில் இங்கேதான் குறியீட்டின் இன்றியமையாமை மிகுதியாக உணரப்படுகிறது.)

XV