பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

பகுப்பு

குறியீட்டகராதிகள், பொதுவான குறியீடுகளைத் தருவதுடன், இலக்கியம், இரசவாதம், கலையியல், தொன்மம், போரியல், மக்கள் வாழ்வியல் எனப் பகுத்து அணுகுதலும் உண்டு (பார்க்க : Dictionary of Symbols and Imagery). இதனால் ஒரு குறியீடு, வேறு வேறு துறையில் பெறும் பொருண்மைப் பரிமாணம் புலப்படுகின்றது.

பல்வகையான தளங்களிருந்து குறியீடு தோன்றுகின்றது. எனவே அவற்றின் அடிப்படையில் பாகுபடுத்தி அணுகுதல் காணப்படுகிறது. வானமும் பூமியும்; கதை மாந்தரும் மக்களும்; உடலும் செயல்களும்; வாழுயிரிகள்; தொன்ம விலங்குகள்; பூக்கள், தாவரங்கள், மரங்கள்; பொருட்களும் செய்பொருட்களும்; கருத்துருக்களாக அமையும் வடிவங்கள் - நிறங்கள் - எழுத்துகள் - சொற்கள் - எண்கள் எனப் பாகுபாட்டுப்பன்மை புலப்படுகின்றது (1000 Symbols). இவை யொவ்வொன்றும் உட்பகுப்புகள் பலவற்றுடன் அமைவதும் கண்கூடு. சான்றாக, வானம் (Heaven) என்பதில் மேலுலகம், விண்மீன், வெளிச்சம், வால்நட்சத்திரம், சூரியன், கோள்கள், கிரகணம், சந்திரன், ராசி, காற்று, வான் (Sky), மேகம், வானவில், இடி மின்னல் எனப் பல அமைகின்றன (மேற்படி). இவையொவ் வொன்றிலும் பல கருத்தமையும். சான்றாக, வால்நட்சத்திரம் (Comet) என்பதைக் காணலாம். இதில் நம்பிக்கை வயப்பட்ட குறியீட்டுப்பொருளமைவது, தமிழிலக்கிய இயைபும் கொள்வதை இங்கே ஒப்பிட்டுக் கருதலாம்.

வால் நட்சத்திரம், தீய சகுனம்; போரையும் அதைத் தொடர்ந்து வரும் பஞ்சம், கொள்ளை நோய் ஆகியவற்றையும் முன்னுணர்த்துகிறது. கவி மில்டன், சாத்தானை இவ்வால் நட்சத்திரமாகச் சுட்டுகிறார். அரசர் / ஆட்சியாளரின் வீழ்ச்சிக்கு இது உற்பாதமாகிறது. பூமியதிர்ச்சி, வறட்சி, அண்டம் இருளல், உலக இறுதி என்பன இதனால் முன் சுட்டப்படுகின்றன. மற்றொரு நிலையில் (குறுகிய கால) ஒளிநிறை ஊழியம் குறியீட்டுப் பொருளாகிறது. கிறித்தவம், இயேசுபிறப்புக்கு (கிறிஸ்துமஸ்) நட்சத்திரம் என்ற நிலையில் இதனைக் குறியீடாக்குகிறது (Dictionary of Symbols and Imagery, p. 109). ‘எரிபாம்பு', 'புகையும் விண்மீன்' என மெக்சிகோ நாட்டினர் வால் நட்சத்திரத்தைக் குறிப்பிட்டனர். பழைய மெக்சிகோ, பழைய பெரு ஆகிய நாடுகளின் மதகுருக்களும், நிமித்திகர்களும் வால் நட்சத்திரம் தோன்றுவதைக் கவனித்து, துரதிருஷ்டமான பல்வகையான அழிவுகளைச் சுட்டும் தீ நிமித்தமாகக் கணித்து உணர்த்தினர். ஜூலியஸ் சீசரின் கொலைக்கு முன் ஒரு வால் நட்சத்திரம் தோன்றியது குறிக்கப்படுகிறது. (The Penquin Dictionary of Symbols, p. 226). புதிய தொடக்கம், எதிர்காலத்தில் நம்பிக்கை என நேர்ப்பார்வைப் பொருண்மையும் வால்நட்சத்திர வரவால் கருதப்படுவதும் காணப்படுகிறது. முக்கியமான பெரிய மனிதரின் பிறப்பு - இறப்புக்கும் இது அடையாளமாகிறது. அரசன் ஆர்தர், கிறிஸ்து ஆகியோர் பிறப்பு இதனால் சுட்டப்படுவதுண்டு (1000 Symbols, p.17).

பழந்தமிழிலக்கியம் தரும் சில குறிப்புகள் இப் பொருண்மையில் உலகளாவிய சிந்தனை ஒருமையைப் புலப்படுத்துகின்றன. 'தூமம்’, ‘புகைக்கொடி' ஆகிய சொற்களால் வால்நட்சத்திரம் குறிக்கப்படுகின்றது; மழையின்மை / வறட்சி என்பன இதனால் வரும் தீமையின் பரிமாணங்களாக உய்த்து உணரப்படுமாறு குறிப்புகளமைகின்றன. (வால்நட்சத்திரம் வந்தாலும் மழைவளம் குன்றாமை என எதிர்நிலை உணர்த்தலாக அமைகிறது):

மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும்

தென்திசை மருங்கின் வெள்ளி ஒடினும் ....

பெயல் பிழைப்பு அறியாப் புன்புலத்ததுவே

(புறம். 117.1...7)

xvi