பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்

விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும் ...

சூன்முதிர் கொண்மூப் பெயல்வளம் சுரப்ப...

(சிலம்பு.10.102..105)


என்பன சான்றாம்.மேலுள்ள கருத்துகளோடு வேறுபடுத்திக் காணும்போது வால்நட்சத்திரத் தோற்றத்தால் மட்டுமின்றி சனி,வெள்ளிக் கோள்களின் நிலையாலும் இப்பாங்கு அமையும் என்பதால், அந்நிலையும் தீமைக்குக் குறியீடாகத் தமிழ் மரபில் இணைத்துக் கொள்ளத்தக்கது. மேலும், எரிகொள்ளி (meteor) வீழ்தல் / நட்சத்திரம் விழுதல் என்பனவும் பழந்தமிழிலக்கியத்தில் தீமை,அழிவு,மன்னன் இறப்பு எனும் நிமித்தக் குறியீடாகின்றமை ஒப்பிடற்குரியது (சங்க இலக்கியத்தில் நிமித்தக் குறியீடுகள், ஜெ.சரஸ்வதி, சங்கப்புலவரின் பல்துறை அறிவு,(பத்தி} ந.கடிகாசலம்,மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம் 2004,பக்.7௦-72) வால்நட்சத்திரம் கேட்டுக்குக் குறியீடாவது கம்பராமாயணத்திலும் தொடர்வதும் சுட்டத்தக்கது (தூமகேது புவிக்கு எனத் தோன்றிய ... கடுங் கேடு எனும் நாமம்... அயோ.114); இதனால் இது இந்தியக் கருத்தாகப் பரிணாமம் கொள்கிறது எனலாம்.

அணுகுதல்

தமிழிலக்கியத்தில் குறியீடுகளை இனங்காண, இலக்கணங்கள், உரைகள் போன்றன வழிமுறை கூறல் புலப்பட்டிலது. மேனாட்டிலக்கியத் திறனாய்வின் தொடர்புடன் புனைவியல் படைப்பாக்கச் சார்பில் குறியீட்டியல் பற்றிய சிந்தனைகள் தரப்படுகின்றன.ஆங்கிலத்திலமையும் 'குறியீடு அகராதி'களும் திட்டவட்டமான வரையறை அமைத்தில. தொடர்பு,ஒப்புமை ஆகிய இரண்டு அடிப்படைகளில் குறியீடு உருவாகுவதாகவும் பயிற்சியால் நிலை பெறுவதாகவும் உணரலாம்.விடுதலை பற்றிய விளக்கத்தில் 'ஒப்பொடு புணர்ந்த உவமம்,தோன்றுவது கிளந்த துணிவு என்று,பிசிவகை இரண்டு' என்பது (தோல் 1432) இப்புரிதலுக்கு உதவுகிறது.

தொடர்பு

தொடர்பு அடிப்படையாகும்போது, (1) சொல் - பொருள் தொடர்பு என்பது முன்னிற்கின்றது. (1) ஒரு சொல்லின் நேர்ப் பொருள் / சுட்டுப்பொருள் (denotation) அதன் குறிப்புப் பொருளுடன் (connotation) இணைவதில் இச்சொல் - குறியீட்டுத் தொடர்பை உணரலாம். நிறம் பற்றிய சொற்களாக அமையும் கருப்பு,சிவப்பு என்பன, கோபம் எனும் பொருளைத் தரும்போது குறியீடு எனும் மதிப்புப் பெறுகின்றமை சான்று.கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள் என்பது தொல்காப்பியம் (தொல்.855). நெருப்பு,இரத்தம் ஆகியவற்றின் நிறமான சிவப்பு,கோபத்தையும் எதிர்ப்புணர்வையும் குறிக்கிறது {1000 symbols,p.343).நிறக்குறியீடு எனும் வகைப்பாட்டை இவ்வடிப்படையில் உருவமைத்துக் கொள்ளலாம். இதன் உலகளாவிய பாங்கையும் இயைத்துக்கான இயலும். பிறவற்றிலும் வாள் - ஒளி(தொல்.850),தாள் - முயற்சி (குறள் 212) என்பதுபோல் தொடர்ந்து தேரமுடியும்.

(2) அடை - சொல் தொடர்பு என்பது மற்றொரு வகையாகக் கொள்ளப்படுகின்றது. பெயரைச் சிறப்பிக்க வருவன அடை. அவ் அடையால் பொருட்பெயர் ஒரு கருத்துப் பரிணாமத்தை வெளிப்படுத்தும்போது குறியீடாகக் கொள்ளலாம்.தொடர்ந்த ஆளுகை,குறியீட்டை நிலைப்படுத்தும். கொடி (flag) பற்றிய இலக்கியக் குறிப்புகளில் 'வெற்றி' அடையாகப் பயில்தலை இங்கு சான்றாக்கலாம்.

வான் நோய் வெல்கொடி (பதிற்.69.1)

மழைநீர்,வென்றெழு கொடியில் தோன்றும் (மலைபடு.582)

விசய வெல்கொடி உயரி (முல்லை.91)