பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரவெல்கொடி மைந்தன் சேனை (சிலம்பு.8.10)

மின்னுமணி.நாகம் வேல்கொடிமேல் . (பாரதவெண்.73)

இவற்றிலிருந்து 'வெற்றி'என்பதைக் கொடிக்குரிஈடாகக் கொள்ள முடிகின்றது.மேலும் அடைத்தொடரின் அடிப்படையில் இக்கொடி,புகழ்-

புலவுப் படக் கொன்று மிகை தோல் ஓட்டிப்

புகழ் செய்து எடுத்த விறல் சால் நன் கொடி (மதுரை.370-371)

போர்-

கொள்ளும் கொடியெடுத்துக் கொற்றவையும்

கொடுமரமுன் செல்லும் போலும் (சிலம்பு 12.14.4)

எனப் பிற பொருண்மைக்கும் குறியீடாக கொள்ள முடிகிறது.(Flag...Victory of eternal values;triumph over death - 1000 Symbols.p.280)

(3) சொற்பொருளைக் கூறும் முறையால் குறியீடு உணரப்பட முடிவதுண்டு.கண்,கல்வியறிவுக்கு,கண்ணோட்டத்துக்குக் குறியீடாவது சான்று.நேர்நிலை எதிர்நிலை ஆகிய இருபாங்கிலும் இது வெளியிடப்படுகிறது.

கண்ணுடையர் என்பவர் கற்றோர் (குறள்.393)

கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் (குறள்.577)

கண் அறிவுக்குறியீடாக அமைவது உலகளாவிய கருத்தாகும். (It is only natural that the eye the organ of visual perception,should almost universally be taken as a symbol of intellectual perception- The Penguin dictionary of Symbols p.362) கண்ணோட்டம் அவ்வாறு அமைந்தது புலப்பட்டிலது

(4)சொற்பொருள்,பயன்பாட்டுச் சூழல்,குறியீட்டை உணர அடிப்படையாதலும் உண்டு. வான்/வானம் என்பன மழைக்கு, மழைவளத்துக்குக் குறியீடாவதைச் சான்றாக்கலாம்.வள்ளுவர் வான்சிறப்பு (அதி.2) என்பதும்,'யார் யார்க்கும் வான் இன்று அமையாது ஒழுக்கு'(குறள்20) என்று அச்சூழல் பயன்படுத்துவதும் சுட்டத்தக்கன.இப்பாங்கு,

கான் உயர் மருங்கில் கவலை அல்லது

வானம் வேண்டா வில் ஏர் உழவர் (அகம். 193.1-2)

என,சங்க இலக்கியத்திலேயே அமைந்துவிடுகிறது.

(5) சொற்பொருள் விளக்கம் கையாளப்ப்படுமிடத்தில்,குறியீட்டுத்தன்மை புலப்படுத்துவது மற்றொன்று.வில்,சொல்லுக்குக் குறியீடாகிறது.

வல்லவன் தைஇய வாக்கு அமை கடுவிசை

வில்லினான் எய்தலோ இலர்மன் ஆயிழை

வில்லினும் கடிது அவர் சொல்னுள் பிறந்த நோய் (கலி.137.9-11)

விவிலியம் அம்பைச் சொல்லுக்குக் குறியீடாகக் கொள்ளச் செய்கிறது (....வார்த்தைகளாகிய தங்கள் அம்பை நாணேற்றுகிறார்கள் - சங்(644).

(6) சொற்பொருள் - செயல் தொடர்பு காரணமாகக் குறியீடு அமைதல் அடுத்த வகையாகும்.கை - செய்கையை உணர்த்தி,உதவிக்கு (பாதுகாப்புக்கு)க் குறியீடாகிறது.

உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு.

(குறள்.788)

xviii