பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தன் கையே தனக்கு உதவி (பழமொழி)

(In India hand prints on walls,doors or objects are a form of protection-1000 Symbols.p.159).

7) சொற்பொருள் புலப்படுத்தும் பண்பு/தன்மை என்பன அப்பொருளுக்குக் குறியீட்டுப் பாங்கு வழங்குகின்றன.குடை பாதுகாப்புக் குறியீடாவது இதற்குச் சான்றாகும்.வெண்கொற்றக் குடை நீதிக்கும் குறியீடாகிறது (White umbrella of a king, that symbolizes justice- R.S.Pillai,Cilappathikaram.p.132)

எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்....(கலி.9.1)

ஒத்த பொருள் தரும் சொல்லும்,ஒரு பொருள் பல சொல் - இப்பாங்கினதாம்.வெண்கொற்றக் குடையைக் குறிக்கும் கவிகை என்பது சான்று வழங்கும்,

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்

கவிகைக்கீழ் தங்கும் உலகு (குறள்.389)

(ii)சொற்பொருள் நிலையன்றிப் பிறவகை தொடர்பும் குறியீடு காண இடம் அளிப்பதும் தெரிகிறது.

8) அடையாளப் பொருள் குறியீடாவது தனிநிலையில் கருதத்தக்கது. அரசுக்கு மலர்கள் குறியீடாவது, பொறிகள்/சின்னங்கள் குறியீடாவது போன்றன இங்கமையும்.

போந்தை வேம்பே ஆர் என வருஉம்

மாபெருந் தானையர் மலைந்த பூவும் -

(தொல்.106.4-5)

என்ற நூற்பா,மூவேந்தற்குரிய அடையாளப்பூவைத் தருகின்றது. யதேச்சையாகவோ, காரணத்துடனோ அமையும் இத்தொடர்பு, தெரிநிலையாக வெளிப்பட்டு இங்கமைகிறது.வேறாக, குறிப்பாக, உணர்த்தப்படலும் அமையக் கூடும்.கால்கழி கட்டில் இறப்பைக் குறிப்பாகச் சுட்டுவது இந்நிலை

பலர்மீது நீட்டிய மண்டை என் சிறுவனைக்

கால் கழி கட்டில் கிடப்பி

தூவெள் அறுவை போர்ப்பித் திலதே

(புறம்.286.3-5)

அக,புறத்திணையில் துறைகளுக்கு வரும் அடையாள மலர்கள்/தாவரங்கள் என்பனவற்றையும் இங்கே கருதல் தகும்.

(iii) இலக்கிய மரபு காரணமாக,கோட்பாடுகள் வகுக்கப்பட்டதையும் நிலையில்,நிலமும் பொழுதுமான முதற் பொருள்கள்,உரி சார்ந்த கருத்தாக்கங்கள் என்பன.பல்வகைக் கருப்பொருட்களால் உணர்த்தப்படுவது தனி வகையாகும்.அடிப்படையில்,உலகளாவிய தன்மை புலப்படினும் தமிழுக்குரியது எனச் சிறப்பு நிலையில் கொள்ளத்தக்கதாக இவை போன்றனவற்றைக் கருதலாம்.தாவரங்கள்,விலங்கினங்கள் குறியீட்டடிப்படை வழங்குவது பொதுமையாகும்.

9)குறிஞ்சி நிலத்தை உணர்த்தக் குறிஞ்சித் தாவரம் வருதல் வெளிப்படையான தெளிவான குறியீடாகும்.

சாரல், கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே

(குறு.40.3-4)

ஆண்டலைப்புள் வறண்ட நில (பாலை)க் குறியீடாகிறது

ஆண்டலை வழங்கும் கான்உணங்கு கடுநெறி (பதி.25.8)

xix