பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

(iv) வாழ்வியல் சிந்தனைகள் - பண்பாடு,நம்பிக்கை,சமயம்,என்பனவும் குறியீடுகள் உருவாவதற்கும், குறியீடுகள் தேரப்பட்டு இனங் காணப்படுவதற்கும் அடிப்படையாக அமைவது தெளிவுபடுகின்றது.

12)பண்பாடு என்பதில் புலிப்பல் தாலி வீரக்குறியீடாகவும், ஏழடி பின் செல்லுதல் மரியாதைக் குறியீடாகவும் அமைதலை இங்கு கருதல் கூடும்.

புலிப்பல் கோத்த புலம்பு மணித் தாலி

(அகம்.7.18)

காலின் ஏழ்அடிப் பின்சென்று

(பொரு.166)

13) நம்பிக்கை அடிப்படையில், இருள், அளறு,என்பன நரகம் என்பதற்குக் குறியீடாகின்றமை சான்று.

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆர் இருள் உய்த்துவிடும்.

(குறள் .121)

உண்ணாமை உள்ளது உயர்நிலை ஊனுண்ண

அண்ணாத்தல் செய்யாது அளறு

(குறள் .255)

14)தொன்மங்கள் குறியீடாக உருவாகுவது நம்பிக்கை, சமயம், பழங்கதை எனப் பல தளங்களில் அமைய வாய்ப்புண்டு. கற்பிதங்களாக அமையும் அகணம், அமுதம்,அருந்ததி,அன்றில், ஆளி எனப் பட்டியல் நீளும்.இவற்றில் தமிழ் வேரும் இந்திய வேரும் காண முடியும்.அக்குரன்,அரக்கு இல் என இதிகாச சார்புடையன,வள்ளல் தன்மை, அழிவு/நிலையின்மைக்கு முறையே குறியீடாவதற்குப் பழங்கதைச் சார்பு அடிப்படையாகும்.

அக்குரன் அனைய கைவன்மையையே

(பதி.14.7)

அரக்கில்லுள்,பொய்யற்ற ஐவரும் போயினார் இல்லையே

உய்வதற்கு உய்யா இடம்

(பழ.234)

அகணம், அன்றில், ஆளி போன்றன கற்பிதச் சார்பின் உயிரினங்களாக (legendary creatures) அமைகின்றன. எளிதில் அழிந்துவிடக் கூடியதாக அகணம் - மென்மை / நொய்மைக்கும் (நற்.304.8-9; கலி. 14310-12); இணைபிரியாமை - பிரியின் உயிர் வாழாமை என அன்றில் - அன்பு, பிணைப்புக்கும் (நற் 124.1-2; கலி.131.28)

ஆளி நன்மான் அனங்குடைக் குருளை

மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி

(பொரு.139-140)

என ஆளி வலிமைக்கும் குறியீடாகின்றன.இவை தமிழ் மரபுக்குரியன எனக் கருதலாம். அமுதம்,அருந்ததி போன்றன இந்திய மரபினவாகலாம். இறவாமை / நிலைபேறு என்பன அமுதுக்கும், கற்பு அருந்ததிக்கும் குறியீட்டுப் பொருளாகின்றன.

வாயடை அமிர்தம் நின் மனத்தகத்து அடைதர

மூவா மரபும் ஓவா நோன்மையும்

சாவா மரபின் அமரர்க்கா....

(பரி.269-71)

அருந்ததி அனைய கற்பின் (ஐங்.442.4)

15) பொருட்பெயர்கள் குறியீடாக நிற்பதுடன் அவற்றின் சார்புடைய வினைவடிவங்களும் பொருண்மைத் தொடர்பால் குறியீடாக உணரப்படுகின்றமையும் தனித்துச் சுட்டுதற்குரியது.பனிக்காலத்து அவரை பூத்தல் (குறு.825-6),இளவேனிற் காலத்து ஈங்கை தளிர்த்தல் (நற்.867-9)என்பன எதிர்பார்ப்பைக் குறிக்கின்றன. ஆம்பல் கூம்புதலும்

xxi