பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8


வரையறுக்கப்பட்ட பாடத் திட்டத்தின் அடிப்படையில். இப் படிப்பால் அவர் பெறுகின்ற அறிவியல் அறிவு, தேர்வைப் பொறுத்தவரை போதியதாக இருக்கலாமே தவிர, அறிவியலைப் பொறுத்தவரை போதிய அளவு கற்றுத் தேர்ந்த அறிவியல் அறிஞனாகவோ, ஆராய்ச்சி விற்பன்னனாகவோ கருதவியலாது. அதிலும் உயிரியலில் பட்டம் பெற்ற பட்டதாரிக்கு உயிரியலில் ஓரளவு அறிவும் பயிற்சியும் உண்டே தவிர, இயற்பியல், வேதியியல், மின்னியல் போன்ற பிற அறிவியல் துறைகளைப் பொறுத்தவரை, அவர் அவற்றை அதிகம் அறியாதவரே. ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றதாலேயே அவர் அனைத்து அறிவியல் துறைகளையும் பற்றிப் பேச, எழுத முழுத் தகுதியும் உரிமையும் படைத்தவராகிறார் எனக் கூறுவது எங்ஙனம்?

அறிவியல் பட்டதாரிகளில் சிலர் நல்ல தமிழ்க் கவிஞர்களாக, படைப்பிலக்கிய ஆசிரியர்களாகத் தமிழ் இலக்கிய வானில் மின்னிப் பொழிவதைப் பார்க்க முடிகிறது. இவர்கள் தங்கள் எழுத்தாற்றலைச் செழுமைப்படுத்திக் கொள்ள, சொல்வளத்தைப் பெருக்கிக் கொள்ள கற்பனைத் திறனை வளப்படுத்திக் கொள்ள பழந்தமிழ் இலக்கியங்களை மட்டுமல்லாது இக்கால இலக்கியப் படைப்புகளை நன்கு கற்று, தேர்ச்சி பெற்று, தங்கள் படைப்பிலக்கியத் திறனைப் பெருக்கிக் கொள்கிறார்கள். இதுவே சரியான முறையும்கூட.

அதேபோன்று அறிவியல் பட்டம் பெறாதவர்கள் பள்ளிப் படிப்பின்போது உயிரியல், இயற்பியல், வேதியியல் என அனைத்து அறிவியல் பிரிவுகளையும் பற்றி விரிவாக இல்லாவிடினும் ஓரளவு அடிப்படைச் செய்திகளை கற்கவே செய்கிறார்கள். இந்த அறிவியல் அடிப்படையில் அறிவியல் பட்டம் பெற விழைகிறவன் ஏதேனும் ஒரு பிரிவைத் தேர்ந்து, அதைப் படித்துப் பட்டம் பெறுகிறான்.