பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா

101


ஆனால், அறிவியல் புனைகதைப் படைப்பாசிரியரான ஜூல்ஸ் வெர்ன் எழுதிய நூல்கள் இன்னும் மதிப்பிழக்காமல் வாசகர்களிடையே செல்வாக்குமிக்கவைகளாக விளங்குகின்றன. ஒரு நூறு ஆண்டுகள் ஓடிவிட்ட போதிலும் புதிதாக எழுதி வெளிவந்த நூல் போன்றே வாசகர்களால் இன்றும் விரும்பிப் படிக்கப்படுகின்றது. இன்னும் சொல்லப்போனால் சேக்ஸ்பியர் படைப்பிலக்கியத்துக்கு அடுத்தபடியாக உலகெங்குமுள்ள இளைஞர்களாலும் அறிவியல் ஆர்வலர்களாலும் புதுமை விரும்பிகளாலும் பெரிதும் விரும்பப்படும் நூல்களாக ஜூல்ஸ் வெர்ன் நூல்கள் விளங்குகின்றன எனலாம்.

அறிவியல் புனைகதை நூல்கள் வாசகர்களிடையே இவ்வளவு ஆர்வத் தூண்டலைத் தொடர்ந்து ஏற்படுத்த என்ன காரணம்?

சிறந்த இலக்கியப் படைப்பான புதினத்தில் இருக்க வேண்டிய கதையம்சம், அதில் அறிவியல் உணர்வுகளை உட்கொண்ட கதைக் கரு, அதைத் திறம்படச் சித்தரிக்க வல்ல கற்பனை வளம், பாத்திரங்களையும் நிகழ்வுகளையும் கண்முன்னே கொண்டுவந்து காட்டுவது போன்ற வர்ணனைத் திறன், மர்மச் சூழ்நிலையில் நிகழ்ச்சிகளை நகர்த்தும் பாங்கு, இளைஞர்களைப் பெரிதும் கவரவல்ல வீரதீரச் செயல்களைக் கொண்ட கதைப் போக்கு, அடுத்து என்ன? என்ற ஆர்வத்தைத் தூண்டவல்ல திருப்பங்கள் எனப் பல்வேறு உத்திகளைத் திறம்படக் கையாண்டு தன் அறிவியல் புனைகதைகளை அமைத்துள்ளதனால்தான் இவர் மர்மப் புனைகதைகளின் முன்னோடி என்றே திறனாய்வாளர்களால் போற்றப்படுகிறார்.

ஜூல்ஸ் வெர்ன் அறிவியல் புனைகதைகளில் கதையின் முடிவைத் திறம்பட நீட்டிக் கொண்டே செல்வார்.