பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்

கற்பனையாகத்தன்புனைகதையை உருவாக்குவது. முதல் முறையை விட இரண்டாம்முறையே சிறப்புடையது; வலு வானது. அறிவியல் புனைகதைப் படைப்பை நிலை நிறுத்துவது. இதற்குப்புனைகதைஆசிரியனுக்கு அறிவியல் மனப் பான்மையும் அறிவியல் கருப் பொருளை காரண காரியத்துடன் அனுமானமாக வளர்க்கும் வல்லமையும் வேண்டும். அறிவியல் கூறின் அனுமான வளர்ச்சியை வாசகன் ஆய்வு பூர்வமாக உண்மை என நம்பவைக்கும் அறிவாற்றல் வேண்டும்.இதற்கு அவ்வறிவியல் பற்றி ஆழமான அறிவு அவசியம் எனக் கூறி வேண்டியதில்லை.

புனைகதைக்கென எடுத்துக் கொண்ட கருவை அடித்தளமாகக் கொண்டு விவரிக்கப்படும் அறிவியல் அனுமானம் சரியான கட்டுக்கோப்பில் வளர்க்கப் படவில்லை என்றால் விவரிக்கப்படும் அறிவியல் செய்திகள் கருதியதற்கு மாறான விளைவை ஏற்படுத்திவிடும். நாம் எவ்வளவுதான் முயன்று கட்டிய புனைகதை மாளிகை யாயினும் அடித்தளமில்லா கட்டிடமாகக் கலகலத்துவிடும். எனவே, ஒரு அறிவியல் கண்டுபிடிப்பை அடித்தளமாகக் கொண்டு தொடர் வளர்ச்சியை அனுமானிக்கும் படைப்பாளன் ஒரு தேர்ந்த அறிவியல் ஆய்வாளனாக, இன்னும் சொல்லப்போனால் அறிவியல் கண்டுபிடிப்பாளனாகவே மாறிவிட வேண்டும்.அத்தகைய மனப் பான்மையே அப்படைப்பி லக்கியத்துக்கு எல்லாவகையிலும் வலுவும் வனப்பும் ஊட்ட முடியும்.

எனவே, அறிவியல் புனைகதைப் படைப்பிலக்கியத்தைப் பொறுத்த வரை இரண்டாவது வகையில் உருவாக்கப் படுபவைகளே எல்லோராலும்விரும்பிஏற்கப்படும் படைப்புகளாக அமைகின்றன. அவையே அறிவியல் புனை கதைப் படைப்புகள் எனும் தகுதிப்பாட்டிற்கு முழு வலிமை யுடையனவாகும்.