பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா

127


“இந்தக் கடலாய்வுக்கு எனக்கு உலக நூல்களெல்லாம் உதவி செய்தன".

எனக் கூறுவதன் மூலம் அறிவியல் புனைகதைப் படைப்பிலக்கியம் உருவாக்க விழைவோர், அதற்கான அறிவியல் தகவல்களை எல்லா வகையிலும் முயன்று திரட்டிப் பெற்று அவற்றை வகுத்துத் தொகுத்து முறைப்படுத்தி, உரியமுறையில் பயன்படுத்தி இலக்கியம் படைக்க வேண்டும் என்பதை இலைமறை காயாக உணர்த்திவிடுகிறார்.

தான் எடுத்துக் கொண்ட கருப் பொருளுக்கேற்ப களங்களையும் சூழல்களையும் உருவாக்கி, பாத்திரப் படைப்புகளில் வழியே, திரட்டிய தகவல்களை வெளிப்படுத்தும் போது கதையோட்டத்தோடு இணைந்து செல்லும் வாசகன், அச்செய்திகளையும் அறிந்து, உணர்ந்து தெளிந்து அறிவியல் மனப்பான்மை மிக்கவனாக வளர வாய்ப்பேற்படுகிறது. இவ்வாறு அறிவியல் படைப்பாக்க முயற்சி மேற்கொள்வது காலக்கட்டாயம் என்பதை,

“தமிழ் அறிவியல் என்ற பாற்கடலை அப்படியே அள்ளிக் குடித்துவிட வேண்டிய கட்டாயத்திலிருக்கிறது”
எனக் கூறுவதன் வாயிலாக வலியுறுத்துகிறார் கவியரசு வைரமுத்து.

இனி, கதையோட்டத்தோடு எவ்வாறெல்லாம் அறிவியல் செய்திகள் இழைந்து வருகிறது என்பதை அறிவோம்.

நீரைக் கண்டு அச்சமடையும் தன் காதலி தமிழ் ரோஜாவின் பயத்தைப் போக்கும் வகையில்,

“தண்ணீருக்கு நீ பயந்தால் உன்னைக் கண்டு நீயே பயப்படுகிறாய் என்று அர்த்தம்'. எனக் கூறிய காதலன் கலைவண்ணன் காதலியைத் தேற்ற முயல்கிறான்.