பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்

"அய்யோ!அந்த 1சதமும் தீர்ந்து விட்டால்?”

என்பதாக வெளிப்படுகிறது. அவள் பயத்தைப் போக்க விழைந்த கலைவண்ணன் மற்றுமொரு அறிவியல் உண்மை யை

"தீராது தண்ணீர் பூமிக்கு வெளியே போய்விட முடியாது. ஒவ்வொரு மனிதனும் பருகுவது பயன்படுத்தப்பட்ட பழைய தண்ணீரைத்தான், தண்ணீரும் காதலைப் போலத்தான் அதன் மூலகங்கள் அழிவதில்லை.”

எனக் கூறுவதன் வாயிலாக சுழற்சிமுறை மூலம் நீர் மீண்டும் மீண்டும் உயிர்க்குலத்துக்குப் பயன்பட்டு வருவதைச் சுட்டிக் காட்டும் அதே நேரத்தில் நீரின் மூலங்கள் என்றுமே அழியாமல், உயிர்க்குலத்துக்கு உதவி வரும் அறிவியல் உண்மையைத் திறம்பட உணர்த்தி விடுகிறார்.

இன்னும் கடலின் மேன்மையைப் புகழும் வகையில்,

"கடல்! அது ஒரு தனி உலகம், பள்ளி கொண்ட விஸ்வரூபம் எண்பத்தையாயிரம் உயிர்வகை கொண்ட உன்னத அரசாங்கம்'

எனக் கூறுவதன் மூலம் நிலத்தில் வாழும் பல்வேறு உயிர் வர்க்கங்களைப் போன்றே கடலிலும் எண்பத்தையாயிரம் உயிர்வகைகள் வாழ்கின்றன என்ற அரிய தகவலை அழகு படக் கூறி நம் அறிவியல் அறிவைக் கூர்மைப்படுத்துகிறார்.

அதோடு,நிலத்தில்உள்ள உணவு முதலாக இருப்பவற்றையெல்லாம் நாம் பயன்படுத்தி விட்டாலும் கூட கவலை இல்லை.உணவு முதலாக அனைத்தையும் பெற்று துய்த்து மகிழ அமுத சுரபியாகக் கடல் உள்ளது என்ற பேருண்மையைக் கூறிநமக்குநம்பிக்கையூட்டுகிறார்.