பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா

167


இதனை வெறும் கற்பனைப் படைப்பாகக் காட்டாமல் அறிவியல் அடிப்படையில் சிந்திக்கத் தூண்டும் முயற்சியாக அமையும்.

இத்தகைய அறிவியல் புனைகதைப் படைப்புகளில் புதிய புதிய கண்டுபிடிப்புகள் காரண, காரியத்துடன் உருவாக்கிக் காட்டப்படும். அவை வரன் முறையான அறிவியல் ஆராய்ச்சியின் அடிப்படையில் உருவாக்கப்பட வில்லையாயினும் அறிவியல் புனைகதை ஆசிரியர், தனக்குள்ள அறிவியல் அறிவின் துணைகொண்டு, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிக் கதையில் விவரிக்க, அதைப் படிக்கின்ற வாசகர் அதை ஒரு புதிய கண்டுபிடிப்பாகவே கருதி, கதையோடு ஒன்றிய நிலையில் படித்துப் பயனடைய முடியும்.

இக்கருத்தை விளக்கும் வகையில், அண்மையில் நாளிதழில் வெளிவந்த ஒரு அறிவியல் செய்தியை அடிப்படையாகக் கொண்டு அறிவியல் புனைகதையொன்றை டாக்டர் செம்மல் எரிகள் என்ற தலைப்பில் எழுதியுள்ளார். இஃது ஒரளவு சரியான கோணத்தில் உருவாக்கப்பட்ட அறிவியல் புனைகதைப் படைப்பிலக்கியமாகும். அப்படைப்பு எவ்வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை இனி அசை போடுவோம்.

நாளிதழில் வெளிவந்த செய்தி இது தான்.

2004ஆம் ஆண்டில் மாபெரும் ஆஸ்ட்ராய்டு எனப்படும் விண்கல் பூமியின்மீது விழ வாய்ப்புண்டு என்று அறிவியல் ஆய்வாளர்கள் அனுமானிக்கின்றனர். ஆனால், அது பூமியின் எப்பகுதியில் வீழும் என்பதை அவர்களால் துல்லியமாகக் கூற இயலவில்லை. எனினும், இதைப்பற்றிய தொடர் ஆய்வில் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இவ்விடரிலிருந்து உலகைப் பாதுகாப்பது எப்படி என்பது அவர்களின் கவலையாகும்.