பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19


கட்டுரைகளும்கூட நானறிந்த அளவில் இல்லை. இலக்கிய ஆர்வலர்கள் இதுவரை காணத் தவறிவிட்ட ஒன்றை மண வையார் எடுத்துக்காட்டுகிறார். குழந்தையைக் கையைப் பிடித்துச் சந்தைக்கு அழைத்துச் செல்லும் தாய் ஒருத்தி, அங்கே காணும் காட்சிகளையெல்லாம் ஒவ்வொன்றாய்க் காட்டுவதுபோல் ஆசிரியர் பல செய்திகளை எடுத்துக் காட்டுகிறார்.

அறிவியல் படைப்பிலக்கியம் என்பது ஆற்றல் மிக்கது. அவை எதிர்மையை எடுத்துக்காட்டும் நிகழ்கால ஆடிகள், மெய்ம்மையை உருவாக்கவல்ல அனுமானங்கள்; நடப்பியலுக்கு கால்கோள் நடத்தும் தீர்க்கதரிசனங்கள். அறிவியல் படைப்பிலக்கியத்தின் ஆற்றலை உணர்த்த விழையும் ஆசிரியர் அதனைப் பல கோணங்களில் நோக்கி பாடாண் திணையாகத் தம் நூலை அமைக்கிறார். புனை கதை எழுத்தாளர்களின் கற்பனை எங்ஙனம் நிஜமாயிற்று என்பதைப் பல சான்றுகளைக் கொண்டு நிறுவுகிறார். (நம்மவர்களும் சுட்டியிருக்கிறார்கள், சேக்கிழாரின் கண்ணப்பர் புராணம் கண் மாற்று சிகிச்சையை நினைவூட்டவில்லையா! நாம் புராணங்களைப் பொய்ம்மை என்று ஒதுக்கினோ மேயன்றி அதன் அடிப்படையில் நாம் அறிவியல் சிந்தனைகளை வளர்க்காது போனோம்; வளர்த்திருந்தால் நாமும் இத்துறையில் முன்னேறியிருப்போம்)

திரு. மணவை முஸ்தபா புனைகதைகளின் மூலவேர் புராணக் கற்பனையே என்று சுட்டுகிறார். அறிவியல் புனை கதைகள் பொழுதுபோக்கு இலக்கியங்கள் அல்ல; பொழுதைப் பயனுள்ளதாக்கும் இலக்கியம் என்று வாதிடு கிறார். ஐசக் அசிமோவையும், ஜூல்ஸ் வெர்னையும், எச்.ஜி.வெல்சையும் ஆர்வம் பொங்கப் பொங்க நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.