பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20


மேலை நாட்டினரைப் போல அறிவியல் இலக்கியம் படைப்போர் தமிழ் நாட்டில் பெருகவில்லையே என்னும் ஆசிரியரின் ஆதங்கத்தை நம்மால் உணர முடிகிறது. ஆனாலும் டாக்டர் செம்மல் எழுதியுள்ள எரிகல் என்னும் புதினத்தை அறிமுகப்படுத்தும்போது நம்மாலும் முடியும் என்னும் நன்னம்பிக்கை தட்டுப்படுகிறது. (நான் இன்னும் அதனைப் படிக்கும் வாய்ப்பினைப் பெறவில்லை; இனித் தான் தேடிப் படிக்க வேண்டும்).

திரு. மணவை முஸ்தபா ஒரு மதிப்பீட்டை முன் வைக்கிறார்; தமிழில் பெரியவர்களுக்காக எழுதப்பட்ட அறி வியல் புனைகதைகளைவிட சிறுவர்களுக்காக எழுதப்பட்ட னவே சிறந்த வெற்றியைப் பெற்றுள்ளது என்கிறார்.

அறிவியல் கருத்துக்களைக் கதையோடு கலந்து, கவிதையாய்ப் படைத்திருக்கும் வைரமுத்துவின் தண்ணீர் தேசத்தை வியக்கிறார். 1949இல் ப.இராமலிங்கம் என் பாரால் எழுதப்பட்ட அறிவு நூல் வழிகாட்டி என்னும் செய்யுள் ஏட்டினை நன்றியோடு பாராட்டுகிறார். மொத்தத் தில் இந்த நூலைப் படிக்கும்போது, இதுகாறும் அறியாத வற்றை அறிகிறோம். உணராதவற்றை உணர்கிறோம். அறி வியல் இலக்கியம் படைப்பதில் நாமும் ஈடுபட வேண்டும் என்கிற எழுச்சி இந்நூலைப் படிக்கும் யார்க்கும் எழவே செய்யும்.

தன் கடும் உழைப்பின் விளைபயனாய் விளங்கும் இக்கருத்துக்களை முதலில் மென்காற்றாய் மேடையில் தவழ விட்ட திரு. மணவையார் இப்போது எழுத்து வடிவம் தந்து நூலாகவும் ஆக்கிவிட்டார்.

மொட்டிலேயே பிடுங்கி எறியப்பட்ட நாவரசு என்னும் இளைஞனுக்கு மணவை முஸ்தபா இந்நூலைக் காணிக்கையாக்கி இருக்கிறார்.