பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா

27



எங்கும் அறிவியல் எதிலும் அறிவியல்

இது அறிவியல் ஊழி. அறிவியலின் ஆற்றல்மிகு தாக்கம் மனித குலம் முழுவதையும் முனைப்போடு ஆட்கொண்டுள்ளது. தனிமனித வாழ்வாயினும் சமுதாய வாழ்வாயினும் அனைத்திலும் அதன் செல்வாக்கு நீக்கமற நிறைந்துள்ளது. நம் ஒவ்வொருவரின் அகவாழ்விலும் புற வாழ்விலும் அறிவியலின் அழுத்தம் நாளுக்கு நாள் இறுக்க மடைந்து கொண்டே போகிறது. அறிவியலின்துணையின்றி அரை அங்குல வாழ்வைக் கூட நம்மால் நகர்த்த முடிவதில்லை. அறிவியல் வளர்ச்சிக்கேற்ப நம் மக்களின் அறிவியல் அறிவும் உணர்வும் வளர்ந்திருப்பதாகக் கூற முடியவில்லை. இதனால் அவர்களிடையே அறிவியல் கண்ணோட்டம் அல்லது அறிவியல் மனப்பான்மை என்பது கானல் நீராக இருந்து வருகிறது.

அறிவியல் வளர்ச்சிக்கேற்ப நம் அறிவியல் அறிவும் உணர்வும் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு அறிவியல் கண்ணோட்டம் என்பது இயல்பான ஒன்றாக அமைய முடியும். அதற்கு சூழ்நிலை உருவாகும்போது தான் நம் வாழ்வு அறிவியலின் முழுப் பயனையும் பெற்று வளமுற முடியும். இதற்கான இனிய சூழலை உருவாக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். அறிவியல் பார்வை அல்லது அறிவியல் மனப்பான்மை என்றெல்லாம் கூறப்படும் அறி