பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா

37


பின்பு, வடபுலமிருந்து வந்து அவனது வாழ்வில் அழுத்தமான தாக்கங்களை உருவாக்கிய வைதீக சமயமும் அடுத்தடுத்து வந்த சமண, பெளத்த சமயங்களும் வெளிநாட் டிலிருந்து வந்த கிருஸ்தவ, இஸ்லாமியச் சமயங்களும் அவன் வாழ்வில் முக்கிய இடத்தைப் பிடித்துக் கொண்டன. அவற்றின் சமய வழியில் அவன் ஒழுகியதோடு அவ்வச் சமயத் தாக்கங்களின் அடிப்படையில் புதுப்புது இலக்கியங் களை உருவாக்கி உலகுக்குத் தரவும் தயங்கவில்லை. தமிழ் இலக்கிய உலகில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய சமய இலக்கியங்கள் வழியே அவனது வாழ்வியல் போக்கு களையும் சமுதாய நோக்கையும், சமய நெறிமுறைகளையும் நம்மால் உய்த்துணர முடிகிறது.


ஆங்கிலேயர் அளித்த இலக்கிய வடிவங்கள்

காலப் போக்கில் வெள்ளையர் ஆட்சி அழுந்தக் காலூன்றி ஆதிக்கம் பெற்ற பின்னர் அவர்தம் மொழியும் அதன் வழிஆங்கிலேயர் வாழ்க்கை முறை, பண்பாடு, சிந்த னையோட்டம் அனைத்தும் இங்கே ஆழமாகப் படியத் தொடங்கின. அவர்கள் நாட்டில் ஏற்பட்ட தொழிற்புரட்சி யின் தாக்கங்களும் விளைவுகளும் நம்மைப் பெரிதும் பாதித் தன. அதன் மூலம் விரைந்து வளர்ந்து வந்த அறிவியலின் வளர்ச்சிப் போக்குகளும் நம்மவர் சமுதாய வாழ்விலும் எண்ணப் போக்கிலும் அழுத்தம் பெற்றன. அதுவரை வாழ் வியல் இலக்கியம், சமய இலக்கியம் என்ற அளவில் செய்யுள் வடிவில் அமைந்துவந்த இலக்கியப்படைப்புகள் மேனாட்டாரின் நெருக்கத்தால் உரைநடை, சிறுகதை, புதனம், கட்டுரை, ஓரங்க நாடகம் எனப் பல்வேறு புது வகை இலக்கிய வடிவங்களாக உருப்பெறலாயின. சமயத் தையும் விஞ்சும் வகையில் மேனாட்டாரின் இலக்கியப் போக்கில் மேலாதிக்கம் பெற முனைத்த அறிவியல் தாக்கம் இங்கும் படிய முனைந்ததில் வியப்பேதுமில்லை.