பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா

41



ஓயாமல் அங்குப் புயல் வீசிக் கொண்டிருக்கும், எங்கும் பனியையும் பனிக்கட்டியையுமன்றி வேறெதுவும் இல்லை".

எனக் கூறுவதன் மூலம் அன்றைய நிலையில் புதிதாகக் கண்டறியப்பட்ட அண்டார்டிக்காக் கண்டம் பற்றி ஆய்வுத் தகவல்களை அழகுற சித்தரிக்கும் கவிதை வரிகளாக விளக்க முற்படுகிறார் மில்டன்.

மாபெரும் கவிஞனான கெதேயும் மில்டனைப் போன்றே அறிவியல் ஆய்வாளராக விளங்கியவர்தான் இயற்கை அறிவியலைத் தன் படைப்புகளில் திறம்படப் பொதிந்து படிப்போர்க்கு இலக்கிய மெருகுடன் உணர்த்தியவர்.

சுருங்கக் கூறினால் அறிவியல் மனிதனுக்கு அறிவைத் தருகிறது. கலை அவனுக்கு உணர்ச்சியை ஊட்டுகிறது. அறிவுக்கு உலகில் இடன் உண்டென்றால் உணர்ச்சிக்கும் அங்கே இடம் இருக்க வேண்டுவதுதானே முறை?

கலை வளர்க்கும் அறிவியல்

முன்பு கலையையும் அறிவியலையும் பொறுத்தவரை இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவைகள் என்ற கருத்து பரவலாக இருந்ததுண்டு. ஆனால் இன்று அத்தகைய எண்ணங்கள் மங்கி மடிந்து வருகின்றன.

மனித உணர்ச்சிகளின் விழுமிய வெளிப்பாடான கலையும் இயற்கை விதிகளைக் கண்டறியும் முயற்சியான அறிவியலும் ஒன்றோடொன்று இயைந்தவைகளாக ஒன்றன் வளர்ச்சிக்கு இன்னொன்று உதவுபவைகளாக அமைந்து வரு கின்றன. இன்னும் சொல்லப்போனால் கலை வளர்ச்சிக்கான உந்து சக்தியாக அறிவியல் அமைந்து வருகிறதெனலாம்.