பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா

59


'இலக்கியம்' மொழியை முதன்மையாகக் கொண்டு உருப்பெறுவதாகும். இலக்கியத்தில் மொழியே மற்றெல்லாவற்றையும் விட முதனிலை பெற்று அரசோச்சுகிறது.

ஆனால், அறிவியல் இலக்கியத்தில் மொழியைக் காட்டிலும் அதில் கருவாக அமைந்துள்ள பொருளுக்கே முதன்மைநிலை, அறிவியல் இலக்கியப் படைப்பில் விவாதிக்கப்படும் பொருளை விளக்கும் துணைக் கருவியாக மொழி அமைகிறது. இந்த முக்கிய வேறுபாட்டை மனதிற் கொண்டே அறிவியல் இலக்கியத்தை அணுகவேண்டும்.

அறிவியல் இலக்கியம் - அன்றும் இன்றும்

தமிழ் இலக்கிய வளர்ச்சியைப் பொறுத்தவரை பண்டுதொட்டே அறிவியலும் இலக்கியமும் தாமரைமேல் தண்ணீராகவே இருந்துள்ளன. இலக்கியத்தினூடே அறிவியல் செய்திகள் ஆங்காங்கே சிறு அளவில் இடம் பெற்றனவே தவிர, அறிவியலுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அறிவியல் தொழில் நுட்பச் சார்புள்ள தமிழ் இலக்கியங்கள் உருவாகவில்லை என்றே கூற வேண்டும். வானோங்கிய மாடமாளிகைகளையும் கூட கோபுரங்களையும் உருவாக்கியதோடு உலகெலாம் கப்பல் செலுத்தி வாணிகம் செய்து வந்த தமிழனின் அறிவியல் தொழில் நுட்பத்திறனை விளக்கும் செய்திகள் இலைமறை காயாக இலக்கியங்களில் இடம் பெற்ற போதிலும், இலக்கிய மெருகோடு அவை தனி இலக்கிய நூல்களாக வடிவெடுக்கவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. அவ்வாறு உருவாக்கப்பட்டு இருந்தாலும் அவை மக்கள் மனதை எளிதில் ஈர்க்கவல்ல இலக்கியத் தன்மை பெறாமையால், சுவையூட்டத் தவறிய அறிவியல், தொழில் நுட்ப, மருத்துவ நூல்களாக அவ்வத் தொழில் சார்ந்த மக்களிடையே மட்டும் வழங்கத் தக்கனவாக, குறுகிய எல்லைக்குள் முடங்கும் நிலை பெற்றன.