பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
60

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்



இதனால் நிலைபேற்றுத் தன்மை இழந்தனவாக, காலவெள்ளத்தால் அடித்துக்செல்லப்படலாயின. இன்று கூட, எஞ்சிய சித்த மருத்துவம் போன்ற அறிவியல் சார்ந்த நூல்கள் குறுகிய சித்த மருத்துவத்தொழில் புரியும் வட்டத்துக்குள் வழங்கி வருவனவாகவே உள்ளன. மக்களை இன்புறுத்தும் இலக்கிய இன்ப உணர்வோடு தொடர்ந்து பயணம் செய்ய இயலாத எத்துறை நூலும் பின் தங்கி அழிவது அண்மைக் காலம்வரை இருந்து வந்த தவிர்க்க இயலா நிலையாகும்.

இனி, அறிவியல் படைப்பிலக்கிய வளர்ச்சி காலத்தின் போக்கையும் தேவையையும் நிறைவு செய்யும் வகையில் எவ்வாறு உருவாயின என்பதை வரலாற்றுப் பூர்வமாக அறிவோம்.

தொழிற்புரட்சியும் அறிவியல் புனைகதை வளர்ச்சியும்

அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியும் அதன் விளைவாக இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற் புரட்சியும் மக்களின் வாழ்க்கைப் போக்கையே மாற்றியமைத்தன. அறிவியல் பூர்வமாக சிந்திப்பதும் செயல்படுவதும் தவிர்க்க முடியாததாகியது. இதன் அடிப்படையில் கவைக்குதவாத கற்பனைப் படைப்புகளைவிட அறிவுப் பூர்வமான அறிவியல் சார்ந்த இலக்கியப் படைப்புகள் மக்களைப் பெரிதும் கவர்ந்தன. ஏற்பட்டிருந்த விஞ்ஞான வளர்ச்சிக் கூறுகளை அடித்தளமாக அமைத்து மேல் வளர்ச்சியை இலக்கியப் போக்கில் கற்பனையாக உருவாக்கும் முயற்சிகள், அறிவியல் உணர்வும் சிந்தனையும் எழுத்தாற்றலுமிக்க ஆங்கில இலக்கியப் படைப்பாளர்களால் மேற்கொள்ளப்பட்டன. அத்தகைய அறிவியல் பூர்வமான இலக்கியப் படைப்புகளும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. இவ்வாறு மக்களிடையே அறிவியல் உணர்வையும் அறிவையும் கண்ணோட்டத்தையும் உண்டாக்க அறிவியல் இலக்கியங்கள் பெருந்துணையாக அமையலாயின.