பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

மணவை முஸ்தபா 65

களும் தோற்றுவிக்கப்பட்டன என்பதையும் முன்னரே விவ ரித்துள்ளேன். இவை இதழியல் வரலாறு தரும் உண்மைகளாகும்.

 காலப்போக்கில் அறிவியல் புனைகதைப் படைப்புகள் வாசகர்களை ஈர்த்ததோடு தரமான இலக்கியப் படைப்புகள் என்ற மகுடத்தைத் தரித்துக் கொள்ளவும் முயன்றன. இதன் மூலம் தரம் தாழ்ந்த இதழ்களும்கூட, தங்கள் தரத்தை உயர்த்திக் கொள்ளலாயின, வாசகர்களும் வழக்கமான படைப்புகளைக் காட்டிலும் இத்தகைய அறிவியல் அடிப்ப டையிலான படைப்புகளைப் படைப்பதன்மூலம் தங்கள் அறிவையும், தரத்தையும்கூட உயர்த்திக்கொள்ள வாய்ப்புப் பெறலாயினர். அறிவியல் புனைகதை எழுத்தாளர்கள் தங்கள் புதுவகை இலக்கியத் துறையின் மூலம் வியத்தகு அறிவியல் முன்னேற்றத்திற்கு ஏற்ற மனநிலையுள்ளவர்களாக வாசகர்களை உருவாக்கிய மனநிறைவும் பெறலாயினர். இவ்வாறு அறிவியல் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களாக, அறிவியல் படைப்பிலக்கிய ஆசிரியர்களாகத் தங்களை உயர்த்திக் கொண்டனர் எனலாம்.
 இயல்பாகவே அறிவியல் துறையின் வளர்ச்சி சமுதாயத்தின் அனைத்துத் துறைகளின் விரைவான வளர்ச்சிக்குத் தெரிந்தோ, தெரியாமலோ அடிப்படைக் காரணமாய் அமைந்து வருவதை மறுப்பதற்கில்லை. சமூக அமைப்பில் பலவிதமான பாதிப்புகளையும் மாற்றங்களையும் அவற்றின் அடிப்படையிலான முன்னேற்றங்களையும் அறிவியல் வளர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. அதற்கேற்ப தனி மனித வாழ்வு முன்னேற்றம் காண்பது தவிர்க்க முடியாததாகும். இதனை விரைந்து ஏற்கும் மன நிலையை அறிவியல் புனைகதை இலக்கியங்கள் வாசகர்களிடையே ஏற்படுத்துவது சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிந்ததற் கொப்பாகும் எனில் அஃது மிகையன்று.