பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா

77


இந்நூலாசிரியர் எச்சரிக்கை என்று கூறுவது பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதே யாகும்.

"9 ஆம் நாள்'" எனும் இப்புதிய இலக்கியத்தில் நச்சுக் காய்ச்சலின் (இன்ஃபுளுவென்சா) ஒரு வகையை கற்பனை செய்திருக்கிறார். இதற்குச் 'சூப்பர் ஃப்ளு' என்று பெயரிட் டிருக்கிறார். 1918 இல் பரவிய 'ஸ்பானிய ஃப்ளு' என்ற கொடிய நச்சுக் காய்ச்சலைவிட மிகக்கொடிய நோயாகும் இது. இப்போதுள்ள எந்த மருந்தாலும் இந்நோயைக்கட்டுப் படுத்தவோ ஒழிக்கவோ இயலாத நிலையில் இதற்குரிய சரி யான மருந்தைக் கண்டுபிடித்தே தீருவேன் எனச் சபதமேற்று சோதனைச் சாலையில் பெரு முயற்சிமேற்கொள்கிறான் புதின நாயகன் மான்சியர் அலிபோன்.

மனித குல நன்மைக்காக கதாநாயகன் மேற் கொள் ளும் தொடர் முயற்சிகளும் சுகாதார, வணிக நிறுவனங்களி டையேயுள்ள போட்டிகளும் அதன் விளைவுகளும் புதினத்தை முழுமை பெறச்செய்கின்றன.

கொடிய நோயான 'எய்ட்ஸ்' நோயை ஒழிக்க நம்மால் உரிய மருந்தைக் கண்டுபிடிக்க இயலாவிட்டாலும் எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் நோய்க்கிருமியை நம்மால் எளிதாக உண்டாக்க முடிகிறது என்பதைச் சுட்டிக்காட்ட இப்புதினம் தவறவில்லை.

அறிவியல் புனைகதைப் படைப்புகளுக்கான அறி வியல் அடிப்படைகளைத் தேர்ந்தெடுப்பதில் இன்றுள்ள தெளிவு ஆரம்பகாலத்தில் இருந்திருக்கவில்லை. அதற்கு முன்னதாக நம்மிடையே புழங்கிவந்த புராணக் கதைகளின் சாயலிலேயே அறிவியல் புனைகதைப் படைப்புகள் உருவா யின எனலாம். இவற்றால் உண்மைகளைப் போல சில தீங்குகளும் ஏற்படாமல் இல்லை. இஃது ஒரு சுவையான வரலாறாகும்.