பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா

81


புராணங்களும் கிரேக்கம் போன்ற மேலைநாட்டுப் புராண இதிகாச இலக்கியங்களும் விவரிக்கின்றன. அவர்கள் ஓருலகிலிருந்து மறு உலகிற்குச் செல்ல வானரதம் போன்ற வாகனங்களைப் பயன்படுத்தியதாகக் கூறும் செய்திகள் இன்றைய விண்கலங்களை நினைவூட்டவே செய்கின்றன. அவர்கள் எதிரிகளை வீழ்த்த கையை நீட்டிய மாத்திரத்தில் அதிலிருந்து வெளிப்படும் ஒளிக்கற்றைகள் எதிரிகளை அழித்ததாகக் கூறும் சம்பவங்கள் இன்றைய லேசர் கற்றையை நினைவிற் கொண்டு வராமல் இருப்பதில்லை. இந்திரனை இன்றைக்கும் இடி கடவுளாக இந்து சமயப் புராணங்கள் சித்தரிக்கத்தான் செய்கின்றன. இந்திய, கிரேக்கப் புராணங்கள் உட்பட உலகப் புராணங்கள் அனைத்துமே விண்வெளியையும் அங்கே மிதந்து கொண்டுள்ள கோளங்களையும் அடித்தளமாகக் கொண்டே அமைந்துள்ளன. விண்வெளிக்கு அடுத்தபடியாகத்தான் மண்ணும் கடலும் இடம் பெறுகின்றன.

மனிதன் அறிவு விளக்கம் பெறத் தொடங்கிய காலம் முதலே விண்ணில் பிற பறவைகளைப் போன்று பறப்பதில் நாட்டமிக்கவனாகவே இருந்துள்ளான். இந்த ஆசை அனைத்து அண்டங்களையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கையிலிருந்து எழுந்த உணர்வாகும். எண்ணிய மாத்திரத்தில் விண்ணில் பறக்கும் ஆற்றல்மிகு வானவர் களைப் பெற்றிராத புராணங்களே உலகில் இல்லை எனலாம். பண்டைய கால இலக்கியப் படைப்புகளில் வானில் பறக்கவல்ல வாகனங்களைப் பற்றிய செய்திகளைப் பரக்கக் காண முடிகிறது. சங்ககாலப் பழந்தமிழ் இலக்கியங்களில் "தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன்" போன்ற வரிகள் விண்ணில் பறக்கும் வல்லமை கொண்ட "தூங்கெயில்" எனும் பறக்கும் கோட்டைகள் பற்றிக் கூறும் செய்திகள் இன்றைய "கொலம்பியா" போன்ற விண்வெளி ஒ
ஓடங்களை நினைவுபடுத்தவே செய்கின்றன.