பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
7


டையே ஏகப்பட்ட தயக்கம். இவ்வுணர்வை ஊட்டி வளர்க்கும் முறையில் அறிவியல் துறைகளில் பட்டம் பெற்ற சிலர், 'அறிவியல் துறைகளில் பட்டம் பெற்றவர்களே அறிவியல் இலக்கியம் படைக்க முழுத் தகுதி பெற்றவர்கள். மற்றவர்கள் அறிவியல் பற்றி எழுத முற்படுவது ஏற்றுக் கொள்ளத் தக்கதன்று. அவ்வாறு எழுதினால் அஃது அபத்தக் களஞ்சியமாகவே அமைய இயலும்' என்றெல்லாம் பலப்போதும், அறிவுரைகளாகவும் எச்சரிக்கைகளா கவும் கூறிவரும் கூற்றுக்களாகும்.

அறிவியல் அறிவோ படிப்போ இல்லாதவர்கள் அறிவியல் நூல்கள் எழுதவோ அறிவியல் புனைகதை இலக்கியம் படைக்கவோ முற்படுவது சரியன்று என்பதில் இரு கருத்து இருக்க முடியாது. அதே சமயத்தில் அறிவியல் கல்வி கற்ற வெறும் பட்டதாரிகளே அறிவியல் தொடர்பான நூல்களோ அறிவியல் புனைகதைப் படைப்புகளோ உருவாக்க முழுத் தகுதியும் உரிமையும் படைத்தவர்கள் என்ற கூற்றிலும் முழு உண்மை இல்லை.

எழுத்துத் திறமை என்பது எல்லோருக்கும் பொதுவான ஒன்று. அதிலும் படைப்பிலக்கிய ஆற்றல் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே கைவரப் பெற்ற திறமையாகும். இதற்கு வெறும் அறிவியல் அறிவுமட்டும் போதாது, போதிய மொழியறிவு, சொல்லாட்சித் திறன், எழுத்தாற்றல், பாத்திரப் படைப்பு, கதை பின்னும் கற்பனை வளம் எல்லாவற்றிற்கும் மேலாக சுவையாகக் கதை சொல்லும் உத்தி அனைத்தும் கைவரப் பெற்றவர்களாலேயே அறிவியல் இலக்கியம் படைக்க முடியும். வெறும் அறிவியல் பட்டதாரிகளாலேயே இதைச் சாதிக்க முடியும் எனும் கூற்று வேரற்ற மரம் போன்றதாகும்.

மேலும் அறிவியல் பட்டதாரி அறிவியலின் ஏதேனும் ஒரு பகுதி பாடத்தில்தான் தேர்ச்சி பெறுகிறார். அதுவும்