பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

97

மணவை முஸ்தபா 97

யடித்தும் தொடர்ந்து அமுக்கியும் குத்தியும் வாயோடு வாய் வைத்து பலமாக ஊதி உயிர்க்காற்றை உட்செலுத்தியும் இதயத்தை மீண்டும் இயங்கச் செய்து உயிரூட்டப்பட்டது. இன்றைக்கு நின்றுபோன இதயத்திற்கு அதிர்வூட்டி இயங்கச் செய்ய கருவிகளெல்லாம் வந்துவிட்டன. இத்தகு அறிவியல் ஆய்வுக்கும் முன்னேற்றத்திற்கும் வழியமைத்த பெருமை அறிவியல் கண்ணோட்டத்தோடு கூடிய அவரது கற்பனைப் படைப்பையே சாரும்.

 அமெரிக்கப் புனைகதை எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் ஹியூகோ ஜென்ஸ்பேக் என்பவராவார். இவரை அமெரிக்கப் புனைகதை எழுத்தாளர்களின் முன்னோடி என்று கூடக் கூறலாம். இவரது படைப்புகள் பலவும் வருங்கால சமுதாயம் எத்தகைய வசதிகளைப் பெற இயலும் என்பதை அறிவியல் அடிப்படையில் அனுமானித்து, அதையே தன் கதைகளில் சொல்லோவியமாக வரைந்து வந்தவர்.அவரால் விவரிக்கப்பட்ட பல தொழில் நுட்பப் புத்தமைப்புகள் பெரும்பாலும் பின்னர் முழுமை அறிவியல் ஆய்வாளர்களால் புதிய கண்டுபிடிப்புகளாகக் கண்டுபிடிக்கப்பட்டு அன்றாடப் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுவிட்டன. அவற்றுள் ஒன்று அவர் தொலைக்காட்சி பற்றி விவரித்திருந்ததாகும். அதற்கு முன் அப்படியொரு கருவி பற்றி யாருமே சிந்தித்திருக்கவில்லை. ஒரு தொலைக்காட்சிப் பெட்டி எவ்வாறு இயங்கியது என்பதை விவரித்திருந்தது, அவரது அறிவியல் பார்வையின் உன்னதத்தை உணர்த்துவதாக அமைந்திருந்தது.
 இவர் தமது கதை நூல்களில் அணு ஆயுதப் போர் பற்றியும் விவரித்திருந்தார். அப்போரின் கடுமையான நிலைகளையெல்லாம் விளக்கியிருந்தார். இன்றைக்கு அணு ஆயுதப்போர் உலகை எல்லாவகையிலும் அச்சமூட்டி வருதை அனைவருமே அறிவோம்.