பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



முகவுரை

தமிழ் என்றால் இனிமை. தமிழ்மொழி இனியமொழி. தமிழின் இனிமை எல்லோரையும் கவர்ந்தது. அதன்பால் ஈடுபடத் துாண்டியது. அந்த இனிமையைப் பாடி மகிழ்ந்தனர் பலர்; துய்த்துப் பயன் பெற்றனர் பலர்: ஆய்ந்து போற்றினர் பலர்; வியந்து பாராட்டினர் பலர் நயந்து கவைத்தனர் பலா, கனிந்து உருகினர் பலர் ; நினைந்து பூரித்தனர் பலர் உணர்ந்து சாற்றினர் பலர்.

சைவ சமயத்தினரும் வைணவ மதத்தினரும் புத்த தர்மத்தினரும் சமண நெறியினரும் கிருத்துவ வேதத்தினரும இஸ்லாம் மார்க்கத்தினரும் தத்தமதென உரிமை கொண்டாடும் அளவுக்குப் பொதுமையைத் தன்னிடத்தே கொண்டிருக்கினறது இனிய தமிழ்மொழி. எல்லா சமயத்தினரும் அந்தப் பொதுமையான இனிமையில் புதுமையை புகுத்தியுள்ளனர். எல்லா மதததினரும் தத்தமக்கேயுரிய கருத்துக்களை உட்செருகியுள்ளனர். எல்லாத் தர்மத்தினரும் தத்தமது கோட்பாடுகளை இடம்பெறச் செய்துள்ளனர். எல்லா நெறியினரும் தத்தம் தத்துவங்களை அமைத்துச் சென்றடைந்துள்ளனர். எல்லா வேதத்தினரும் தத்தம் சிறப்புக் கொள்கைகளை வேரூன்றச் செய்துள்ளனர். எல்லா மார்க்கத்தினரும் புதுப்புது இலக்கிய வடிவங்களை புகுத்தி இனிய தமிழ் மொழியை வளம் பெறச் செய்துள்ளனர். புது மெருகூட்டியுள்ளனர்.

அத்தகைய ஒரு சிறப்பு அம்சத்தையே இந்நூலாசிரியர் இங்கு விளக்கியுள்ளார். தமிழ்மொழியை வளம்பெறச் செய்வதற்குப் பல புது வகையான இலக்கிய வடிவங்களை இங்கு அறிமுகம் செய்துள்ளனர். தமிழ்ப் புலவர்கள் தமிழ் யாப்பு முறைக்கு அமையவே முஸ்லிம்களால் தமிழில் அறிமுகம் செய்யப்பட்ட இலக்கிய வடிவங்கள் அமைந்துள்ள போதிலும் அவ்விலக்கிய வடிவங்களின் பெயர்களும் அவற்றின் பொருளடக்கமும் முஸ்லிம் மக்களின் தனிப் பெருமையைச் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கின்றன.