பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

123

போரிட்டு வெற்றி கொண்ட வரலாற்றை விரித்துரைக்கிறது இந்நூல். முஸ்லிம்கள் மீது படையெடுத்து வந்த முஸ்லிமல்லயதாருக்குத தலை மையேற்றுப் போரிட்ட அரசர்களான இபுனியன், உச்சி தாகி, வடோச்சி, இந்திராயன் ஆகியோரின் பெயராலேயே இவ்வைந்து படைப்போர்களும் தனித் தனிப் பெயரில் இபுனியன் படைப்போர், தாகிப் படைப்போர், வடோச்சிப் படைப்போர், இந்திராயன் படைப்போர் என அழைக்கப்பட்டாலும் இவ்வைந்தும் முஸ்லிம்களின் சார்பில் தலைமையேற்றுப் படை நடத்திய மாவீரர் அலி (ரலி) அவர்களோடு பொருத காரணத்தால் ஐந்து படைப்போர்களும் இணைந்த நிலையில் 'ஐந்து படைப்போர்’ என அழைக்கப்படலாயிற்று.

சுமார் இருநூறு ஆண்டுகட்கு முன் எழுதப்பட்ட இந்நூலின் ஆசிரியர் தென்பூவை எனும் ஊரைச் சேர்ந்தவர்; கந்தப்பிள்ளை என்பாரின் திருமகனாவார்; தென்பூவை வாழ் மக்களிடையே அரங்கேற்றப்பட்டது என்ற தகவல்களையெல்லாம்.

"திருவளரும் தென்பூவை சேர்ந்த முஸ்லிம்களிலே
மருவளரும் திண்புயத்தான் வாகுகந்தப்பிள்ளைஅதன்
ஆதியருளாலே அசன் அலியென்றோதும் பையல்
நீதிபெறப் பாடி நிகழ்த்தியரங் கேற்றினனே"

எனத் தோற்றுவாய்ப் பாடல் மூலம் தெளிவாக்குகிறார்.

இந்நூல் உருவாகத் தோன்றாத் துணையாகப் பொருளுதவி செய்த வள்ளல் பெருந்தகை ஆரைநகர் ராவுத்தப் பிள்ளை என்பாரை நன்றியுடன் நினைவுகூற இந்நூலாசிரியார் தவறவில்லை. ஐந்து படைப்போர் ஆக்கம் பெறத் துணை நின்ற கொடை நாயகருக்கு வல்ல அல்லாஹ்வின் பேரருள் பொழிய இருகரமேந்தி இறையருள்வேண்டுகிறார்.