பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160


தந்தை அபூபக்கர் சித்தீக்கும் அவர் தம் துணைவியாரும் பணயப் பொருளாக விட்டு வந்த அருமந்தச் செல்வனைத் திரும்பப் பெற்ற அசுமத் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினார். தன் துாது மாபெரும் மனமாற்றத்தை ஏற்படுத்தி, தீனெறி செழிக்க வகை கண்டது குறித்து மகிழ்ந்து நின்றார் முர்ரத் இத்தகைய இனிய காட்சியோடு செய்யிதத்துப் படைப்போரை முடிக்கிறார் புலவர் குஞ்சு மூசு ஆலீம் லெப்பை அவர்கள்.

குஞ்சுமுசுப் புலவரின் முந்தையப் படைப்பான சல்காப் படைப்போரில் கன்னி சல்கா இஸ்லாத்தில் இணையு முன்னர், அவளது எழிலழகை இனிய சொல்லோவியமாகத் தீட்டிக் காட்டியது போன்றே ‘செய்யிதத்துப் படைப்போர்’ இலக்கியத்திலும் அழகுமிகு நங்கை செய்யிதத்து, இஸ்லாத்தில் இணையும் முன்னர் அவளது பேரழகைப் பாராட்டி வர்ணித்துப் போற்ற புலவர் தயங்கவில்லை. இஸ்லாமியநெறியை ஏற்ற பின்னர் இவ்வாறு பெண்ணழகைப் போற்றிப் பாராட்டி மகிழ இடமிருக்காது என்பதைத் தெளிவாக உணர்ந்தவராதலின், அதற்கு முன்பே தன் வர்ணனைத் திறனால் அவளது வடிவழகை சொற்சித்திரமாக வெளிப்படுத்தி படிப்போரை இன்ப உணர்வில் திளைக்கச் செய்து விடுகிறார். சான்றாக ஒரு பாடலைப் பார்ப்போம்.

விண்ணிலே தண்ணொளி பரப்பிவரும் வானமதி ஒரு நாள் பூமியை நோக்கித் தன் பார்வையை செலுத்தியதாம். அப்போது தரையிலே நடமாடிய ஒரு மங்கையின் மீது நிலவின் பார்வை நிலைகுத்த நின்றது. இரவு நேரங்களில் வானில் தோன்றி மண்ணுலகின் இருளகற்றி ஒளி பாய்ச்சி பெருமித நடைபோட்டு உலகையே வலம் வரும்நிலவாகிய தன்னைவிட ஒளிமிக்க வதனமதி கொண்ட செய்யிதத்து எனும் மங்கை நல்லாளின் ஒளிமுகம் நிலவைத்திகைக்க வைத்தது. தண்ணொளி மிக்க தன்னைவிட அழகுமங்கை செய்யிதத்து ஒளி மிக்கவளாக இருப்பதறிந்த நிலவு நாணு-