பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

165


சீரணி அசனார் பாலர் செய் படை ப்போரைச் சொல் வோம்”

எனக் கூறி தெளிவுறுத்துகிறார்.

படிப்போரின் அல்லது படிக்கக் கேட்போரின் நெஞ்சங்களை நெக்குருகச் செய்யும் வண்ணம் நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

நாலாயிரம் போர்வீரர்களைக் கொண்ட உமறுஇப்னு சஆதின் தலைமையிலான எசீதின் படையினர் எழுபத்திரண்டு பேர்கள் மட்டுமே அடங்கிய சிறு குழுமத்தோடு மூர்க்கமாக மோதிப் பொருது சின்னாபின்னப்படுத்துகின்றனர். ஒருவர் பின் ஒருவராக மடிகின்றனர். இறை நம்பிக்கை ஒன்றையே உயிர் மூச்சாகக் கொண்ட இமாம் ஹூசைனாரின் சிறுபடை சர்வாதிகார முடியாட்சிக்கு முடிவுகாணும் வேட்கையோடு மோதி தாங்கொணா துயரங்களை அடைகின்றது.

இந்நிலையில் இமாம் ஹூசைனாரின் மூத்த மகன் அலியக்பர் முதன் முதலாகப் போரியற்றப்புறப்படுகிறார். வீரப் போரிடும் அலியக்பர் எதிரியின் வாளுக்குஇறையாகி மடிவதை நேரிற் கண்ட இமாம் ஹூசனாரின் செல்லப் புதல்வர் காசீம் எழுச்சியும் உணர்ச்சியும் மிகக் கொண்டவராகப் போர்க்களம் நோக்கிப் புறப்படுகிறார். இதனையறிந்த இமாம் ஹூசைனார் காசீமின் தந்தை இமாம் ஹசனார் இறப்புக்குமுன் வெளியிட்ட இறுதி விருப்பத்தை வெளியிடுகிறார். ஹூசைனாரின் மகளை காசீம் மணக்க வேண்டும் என்பதே அவ்விருப்பம் தன் தந்தையின் இறுதி விருப்பத்தை இனிது நிறைவேற்ற விழைந்த இளைஞர் காசீம் அவ்வாறே மணமுடிக்கிறார். மணக்கோலம் கலையும் முன்னரே வாளேந்திச் செறுகளம் நோக்கிச் சென்று எசீதின் படையுடன் வீரப் போரிட்டு மாய்கிறார். சுற்றம் சூழ எங்கும் அவலச் சூழல் கவ்வ அவரது நல்லுடல் அடக்கம் செய்வதோடு நூலை முடிக்கிறார் ஆசிரியர்.