பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

167


“கூந்தல் அவிழ்க்கலையே
தங்கக் காப்பு கழட்டவில்லை
கொண்டு மணமுடித்த மலர் மாலை
செண்பகம் வாடலையே

என்றெல்லாம் கதறியழுதுக் கண்ணீர் சிந்திப் புலம்பும் காட்சி, நாட்டுப்புற மக்களிடையே நிலவி வரும் ஒப்பாரிப் பாட்டாகவே அமைந்துள்ளது.

காசீம் வீரத்தை மிகைப்படுத்திக் காட்டும் வகையில் இயற்கை கடந்த செயல்களாக வானோர் வாழ்த்துவது, காசீமின் வெற்றி முகம் கண்டு மலர்மாறி பொழிவது காசீமின் இறப்பறிந்த சொர்க்க மங்கையரும் வானவரும் துயரமிக்கவர்களாக வருந்தியழுவது போன்றவை காசீமின் ஆற்றலையும் வீரப்புகழையும் உயர்த்திக் கூறக் கையாளப்பட்ட உத்திகளாக அமைந்துள்ளன.

சாதாரண படிப்பறிவுள்ளவர்களையும் பாமரமக்களையுமே கருத்திற் கொண்டு படைக்கப்பட்ட ‘காசீம் படைப்போர்’ நாட்டுப்புற இலக்கிய வட்டத்திற்குள் சேர்க்கப்படத்தக்கதே என்பதில் ஐயமில்லை. மற்ற படைப்போர் இலக்கியப் போக்கினின்றும் சற்று மாறுபட்ட போக்கிலும் சூழலிலும் இந்நூல் அமைந்துள்ளது.

இந்த நூலுள் கையாளப்பட்டுள்ள அளவுக்கு பாமரர்களின் வழக்குச் சொற்களும் உவமான உவமேயங்களும் பழமொழிகளும் வேறு எந்தப் படைப்போர் இலக்கியத்திலும் இடம் பெறவில்லை எனத் துணிந்து கூறலாம். நாட்டுப்புற மக்களின் உணர்ச்சிப் போக்குகளைக் கருத்திற் கொண்டு இயற்றப்பட்ட நாட்டுப்புற இலக்கியப் படைப்பாகவே ‘காசீம் படைப்போர்’ அமைந்துள்ளது என்பதில் சிறிதும் ஐயமில்லை.