பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

169

நொண்டி நாடகம்

தமிழுக்காக எனப் ‘படைப்போர்’ இலக்கிய வகையை உருவாக்கியது போன்றே, முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் உருவாக்கிய மற்றொரு தமிழ் இலக்கிய வடிவம் ‘நொண்டி நாடகம்’ என்பதாகும். இதைச் சிறப்பாகத் தம் ஆய்வுகளில் பல இடங்களில் குறிப்பிட்டுப் பாராட்டிக் கூறியுள்ளார் தமிழ் இலக்கிய ஆய்வறிஞர் திருமயிலை சீனி-வேங்கடசாமி அவர்கள்.

நொண்டி நாடகத்தின் கதாநாயகன் ஒரு காலை இழந்தவனாக நொண்டிக் கொண்டு ஆடியபடியே தன் வரலாற்றை விரித்துரைக்கும் முறையில் அமையும் ஒரு வகைக் கூத்தாகும். இதற்காக ஆடுகளம் ஏறுவோன் தன் காலை முழங்காலுக்கு மேல் மடித்துக் கட்டிக் கொண்டு, ஒற்றைக் காலில் தத்தித் தத்தி ஆடும் முறையில் அமையும். எனவே, இது ‘ஒற்றைக்கால் நாடகம்’ என்ற பெயராலும் அழைக்கப்படுவதுண்டு.

உழைத்துக் களைத்து வரும் ஊர்மக்கள் ஊர் நடுவே அமையப்பெற்ற மேடையருகே இரவு நேரங்களில் பொழுது போக்கிற்கென கூடுவர். கூத்து நிகழ்த்துவோன் தனியொரு நடிகனாக உடுக்கடித்துக் கொண்டோ அன்றி ஜால்ரா போன்ற கருவியை இசைத்துக் கொண்டோ காலை மடித்துக் கட்டியபடி பாடியும், பாட்டிற்கேற்ப ஆடியும் ஒடியும் குதித்தும் மெய்ப்பாடு தோன்ற நடித்து மக்களை மகிழ்ச்சிப்படுத்துவான் இதுவே முக்கியத்துவம் பெறுகிறது.

தமிழில் எழுதப்பட்ட சிற்றிலக்கிய வகைகளையெல்லாம் ‘பிரபந்தங்கள்’ என்ற பொதுப் பெயரால் அழைப்பது