பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170


வழக்கம் இத்தகைய பிரபந்த வகைகள் தொண்ணுாற்றாறு என வகைப்படுத்திக் கூறுவர். ஆனால், இப்பிரபந்த வகைகளுள் ‘நொண்டி நாடக’ வகை இடம் பெறவில்லை. இதிலிருந்து, இவ்வகை நாடக முறை மிகவும பிற்காலத்திலேயே உருவாக்கப்பட்ட இலக்கிய வடிவம் என்பது தெளிவாகிறது.

இத்தகைய நொண்டி நாடகங்களில் முதலாவதாக உருவாக்கப்பட்ட நாடகம் ‘செய்தக்காதி நொண்டி நாடகம்' என்பதாகும். இந்நாடகக் கதாநாயகரான செய்தக்காதி என்பவர் சீதக்காதி என அழைக்கப்படும் வள்ளல் பெருமகனாரான செய்கு அப்துல் காதிர் அவர்களாவார் .

நொண்டி ஒருவன் வள்ளல் செய்தக்காதியின் வள்ளல் தன்மையைப் பாராட்டிப் புகழும் முறையில் கதைப் போக்கு அமைக்கப்பட்டுள்ளது: படிக்கவும் நடிக்கவும் ஏற்றதாக இந்நாடக இலக்கியம் அமைந்துள்ளது கவனிக்கத்தக்கதாகும்.

இந்நொண்டி நாடகத்தை இயற்றிய ஆசிரியர் ஒரு முஸ்லிம் என்பதற்கான சான்றுகள் கிடைக்கின்றவே தவிர, ஆசிரியர் முழுப் பெயர் இது தான் என்று அறுதியிட்டு உறுதிப்படுத்துவதற்கான சான்று எதுவும் இதுவரை கிடைத்திலது. எனினும் இப்புதுவகை இலக்கிய வடிவத்தை உருவாக்கியவர் இஸ்லாமியத் தமிழ்ப் புலவரே என்பதற்கான அகச் சான்றுகளும் புறச் சான்றுகளும் இலக்கியப் புலவர்களாலும் திறனாய்வாளர்களாலும் உறுதியாக எண்பிக்கப்பட்டுள்ளன.

இந்நாடகத்துள் வரலாற்றுச் சம்பவங்கள் இடப் பெற்றிருப்பதால் இஃது எழுதப்பட்ட காலத்தை ஒருவாறு ஊகித்தறிய இயலுகிறது.