பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

175

எப்படியும் தளபதி துல்பர்கானுக்குச் சொந்தமான குதிரையைத் திருடுவது எனத் திட்டமிட்டு, அதற்கான சில கருவிகளோடு மாறு வேடத்தில் மொகலாயர் படை தங்கியிருந்த பகுதிக்குள் நுழைத்து, என்னை யாரும் அடையாளம் கண்டு கொள்ள இயலாதபடி திறமையாக நடந்து கொண்டேன். அங்குள்ள இரகசியங்களையெல்லாம் தெரிந்து கொண்டேன். இவ்வாறு பதினைந்து நாட்களை ஓட்டினேன்.

ஒருநாள் அமாவாசை இரவன்று, கும்மிருட்டில், தளபதிக்குச் சொந்தமான மிக அழகான குதிரையொன்றைக் கைப்பற்றி மெதுவாக ஓட்டிச் சென்றேன் எல்லோரும் ஆழ்ந்த தூக்கத்திலிருந்தனர் அந்தச் சமயம் பார்த்து ஒரு சோனி நாய் குரைத்தது. படை வீரர்கள் எழுந்தார்கள். குதிரையை விட்டிரங்கி தண்ணீர் எடுக்கப் பயன்படும் தோல் பைக்குள பதுங்கிக் கொண்டேன். ஆனால், படைவீரர்களோ எரிபந்தம் கையிலேந்தி என்னை எங்கும் தேடினார்கள்.

தோல் பையைவிட பாதுகாப்பான இடத்தில் பதுங்க எண்ணி அருகிலிருந்த விறகுக் கட்டைகளுக்குள் மறைந்து கொண்டேன். எங்கிருந்தோ வந்த தேள் ஒன்று இருளில் பதுங்கியிருந்த என்னைக் கொட்டி விட்டது. அதுவும் தோள் பட்டையில கொட்டியதால் விஷக்கடுப்பு தாள முடியவில்லை. பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துப் பார்த்தேன். இயலவில்லை. வலி தாங்க முடியாத நிலையில் கீழே படுத்துப் புரண்டேன், அழுது புலம்பிக் கதறினேன். என் சத்தத்தைக் கேட்டு மொகலாய வீரர்கள் நான் பதுங்கியிருந்த இடத்தைக் கண்டறிந்து, என்னைக் கையும் மெய்யுமாகப் பிடித்து என் குடுமியை இறுகப் பற்றியவர்களாய் தளபதி துல்பர்கான் முன்னிலையில் நிறுத்தினார்கள். அவர் என் காலையும் கையையும் வெட்டுமாறு உத்தரவிட்டார். அவ்வாறே என் காலும் கையும் துண்டிக்கப்பட்டன.