பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

"அழிக்கும் புவிவாழி-செருவில்

அரிய துரை சேதுபதிவாழி

கீழைக்கரைவாழி-சிங்கச்

கேசச் சதக்கத்துல்லா வாழி"

என வாழ்த்துவதுடன் இந்நொண்டி நாடகம் நிறைவு பெறுகிறது.

இந்நொண்டி நாடகத்தை 'இலக்கியம்’ என்ற வரையறைக்குட்பட்ட கோட்பாட்டோடு பார்க்கும்போது தர மிக்க இலக்கியம் எனக் கூறுவதற்கில்லை. ஆனால், அன்றையச் சூழலில் உருவாக்கப்பட்ட நாட்டுப்புற இலக்கியப் படைப்புகளோடு ஒப்பிடும்போது, அவற்றுள் இஃது குறிப்பிடத்தக்க உயர் படைப்பே என்பதில் ஐயமில்லை.

இந்நூல் மூலமாக அன்றைய அரசியல் சூழலையும் வரலாற்று நிகழ்ச்சிகளையும் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது.

அக்கால கட்டத்தில் செஞ்சிக்கும் கீழக்கரைக்கும் இடைப்பட்ட வழியிலுள்ள முக்கிய ஊர்களைப் பற்றிய செய்திகளையும் கீழக்கரையின் செல்வச் செழிப்பையும் ஊரின் புகழ்பெற்ற இடங்களையும் மிகத் தெளிவாக இந்நூல் விளக்கிக் காட்டுகிறது.

இந்நூல் வள்ளல் செய்தக்காதியின் பெருமையையும் பேசுவதாக இருப்பினும் அக்காலச் சமூகச் சூழலையும் மலிந்திருந்த திருடு விபசாரம் போன்ற சமூகத் தீங்குகளையும் விரிவாக எடுத்துக் கூறி, அவற்றால் ஏற்படும் கொடுந்தீங்குகளைச் சுட்டிக்காட்டி, படிப்போர்க்கு அவற்றின் மீது வெறுப்பை ஏற்படுத்தி சமூகத்தினின்றே இத் தீங்குகளை ஒழித்துக் கட்டுவதற்கான உணர்வையும் உத்வேகத்தையும் மக்களுக்கு ஏறபடுத்துவதும் ஒரு முக்கிய நோக்கம், இலைமறை காயாக இந்நூலுள் இடம் பெற்றிருக்கிறது