பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

187

செங்கழுநீர் வெண்டாழை செந்தாழை பைங்கமலத்
தங்குமலர் பாதிரிமந் தார மிருள் வாசி
செவ்வந்தி பொற்கொன்றைசெவ்வாம்பல் மாதுளம்பூ
அவ்வந்தி நேர்மலர்ந்த அழகிய நீலோற்பலமும்
இந்தமல ரெல்லாம் இசைந்தசர மாய்த்தொடுத்துப்
பந்தரிட மெல்லாம் பரிந்துவிதா னித்தாரே"

எனக் கூறும்போது, படிப்போரையே மணப்பந்தலுக்கு அழைத்துச் சென்று விடுகிறார் நூலாசிரியர்.

மேலும் பொன், வெள்ளி, வஜ்ரம், மரகதம், தங்கத் தகடு, மாணிக்கம், புருடராகம் ஆகியவற்றை சரங்களாகத் தொங்கவிட்டு பந்தலெங்கும் தென்னம்பாளை கதலித்தாறு இள நீர்ப்பைங்குலை எலுமிச்சப்பழம் கொழிஞ்சிப் பழம் வாழைப்பழம் மாதுளங்கனி தாமரத்தம பழம் பலாக்கனி முதலியவற்றை வைத்து, கரும்பு, கதலி, கமுகு ஆகியவற்றை பந்தலின் தூண்கள் தோறும்கட்டி, மேக வண்ணப்பட்டு, வீரவானிச்சேலை, ரத்ரவன்னி, சந்திர வன்னி, சூர்யபடம் பொற்சரிகைக் கம்பிக்கரைச் சேலை ஆகியவற்றை வண்ணவண்ணமாக விரித்துப் பரப்பிக் கட்டிப் பந்தலை அலங்கரித்து மணமேடை அமைத்திருந்ததாகக் கூறுகிறார் மற்றும் நவரத்தின விளக்கும். தூண்டா மணி விளக்கும் தூக்கு விளக்கும் குத்து விளக்கும், சித்திர விளக்கும் ஏற்றி, மணவறைமுன் பொன்னிறை குடத்தில் பூம்பாளை சாய்த்து வைத்திருந்ததாகவும் குறிக்கிறார். இவ்வர்ணனையின் மூலம் அக்கால இஸ்லாமியத் திருமண அலங்காரங்கள், பந்தல், மேடை அமைப்புகள் தமிழ் மண்ணுக்கே சொந்தமான பாங்கில், பிற தமிழ் மக்களின் பழக்க வழக்கங்களை ஓரளவு அடியொற்றி அமைந்திருந்தது என்பதையே நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

கண்ணையும் கருத்தையும் ஒருசேர கவரவல்ல இவ்வலங்காரங்களைக் காண வந்த ஊர் மக்களின் மனநிலையை மிக அழகாக.