பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

197

அரபி மொழி புதிய எழுத்தொலிகளைப் பெற்று வளமடையத் தமிழ் காரணமாயமைந்தது.

அதே போன்று தமிழ் மொழியில் உள்ள க,ச,ட,த, ப, ற என்ற ஆறு வல்லின எழுத்துக்களுக்கு மற்ற மொழிகளில் இருப்பது போன்று மூன்று அல்லது நான்கு வகையான ஒலி வேறுபாடுகளைக் குறிக்கத் தனித்தனி எழுத்துக்கள் தமிழில் இல்லை. பேச்சு வழக்கிலும எழுத்து வழக்கிலும் ஒலி வேறுபாடின்றி ஒரே வித ஒலியைக் குறிக்கும் வகையில் இந்த ஆறு வல்லின எழுத்துக்களையும் கையாள வேண்டியுள்ளது இதனால், சமயங்களில் கருத்து மாறுபாடு ஏற்பட வாய்ப்பேற்பட்டு விடுகிறது. ஆனால், அதே சமயத்தில் அரபி மொழியில் இந்த ஆறு வல்லின எழுத்துக்களுக்கும் ஒலி வேறுபாடுள்ள தனித்தனி ஒலி வடிவ எழுத்துக்களை அரபி எழுத்துக்களின் மேல் சில குறியீடுகளாக இடுவதன் மூலம் பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழில் இல்லாத ஒலிக் குறைவை நிறைவு செய்யும் வகையில் அரபுத் தமிழ் அமைந்துள்ளது என்பது இங்கு எண்ணத்தக்கதாகும்.

அரபுத் தமிழின் துரித வளர்ச்சிக்கு இஸ்லாமியத் தமிழ்ப் பெண்களும் முக்கியக் காரணமாவார்கள். தமிழ் எழுத்தறிவு அதிகம் பெறாது, மறை மொழி என்ற வகையில் அரபி மொழி மட்டும் அறிந்திருந்த இஸ்லாமிய பெண்களும் தமிழ் மொழி எழுத்தறிவில்லா இஸ்லாமிய பாமரர்களும் தாங்கள் அறிந்திருந்த அரபி வரிவடிவம் வாயிலாகவே தமிழ் மொழியைக் கையாண்டு வநதனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

அரபுத் தமிழ் முனைப்பாக வளரத் தொடங்கியது சுமார் 350 ஆட்டுகட்கு முன்னர்தான் எனப் பலராலும் குறிக்கப்படுகிறது. ஆனால், இக்கூற்று முழுமையாக ஏற்கக் கூடியதாக இல்லை அதற்கும் நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே அரபுத் தமிழானது, தமிழ் முஸ்லிம்களிடை-