பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200


அரபுத் தமிழில் பாடல்களை எழுதிக் குவித்தவர்களில் முதலிடம்பெறுபவர் தமிழிலும் அரபியிலும்பெரும்புலமை பெற்ற காயல்பட்டிணம் ஷாமு விகாபுத்தீன் வலியுல்லா அவர்களே ஆவார். நூற்றுக்கணக்கான அரபுத் தமிழ் பாமாலைகளை இயற்றிருந்த போதிலும் அவற்றில் சுமார் இருபத்தைந்து அரபுத் தமிழ் நூல்கள் மட்டுமே அச்சு வாகனமேறியுள்ளன. அவற்றுள் ரசூல் மாலை, அதபு மாலை, பெரிய ஹதீது மாணிக்க மாலை, சின்ன ஹதீது மாணிக்க மாலை என்பன குறிப்பிடத்தக்க அரபுத் தமிழ் படைப்புகளாகும் .

அவரைத் தொடர்ந்து காயல்பட்டிணம் முஹம்மது லெப்பை ஆலிம் அவர்கள் 'ஆனந்தக்களிப்பு’ எனும் நூலை அரபுத் தமிழில் யாத்துள்ளார்கள். அதே போன்று சின்ன உவைஸீனா ஆலிம் அவர்கள் ‘ஹக்கீகத் மாலை’ எனும் அரபுத் தமிழ் நூலை எழுதியுள்ளார்கள். கீழக்கரை செய்யது முஹமமது ஆலிம் அவர்களும் தைக்கா சாகிபு அவர்களும் இஸ்லாமியச் சட்டங்களை விரித்துரைக்கும் நூல்களை அரபுத் தமிழில் எழுதியளித்துள்ளார்கள். பெண்பாற் சூஃபிக் கவிஞர்களுள் ஒருவராகக் கூறப்படும் கீழ்க்கரை அல் ஆரிபு செய்யிது ஆசியா உம்மா அவர்கள் எழுதிய ‘மெய்ஞ்ஞானத் தீப இரத்தினம்’ எனும் அரபுத் தமிழ் நூல் மெய்ஞ்ஞானச் சிந்தனைக் களஞ்சியமாகும். இறைவன், நபிகள் நாயகம், அபூபக்கர் (ரலி) கல்வதது நாயகம் (வலி), அஜ்மீர் முயினுத்தீன் ஆண்டகை, ஹஸன், ஹூசைன், பலலாஹ்,முகையித்தீன் ஆண்டகை, சாகுல் ஹமீது ஆண்டகை, ஆரிபு நாயகம் மற்றும் மழை தாலாட்டு, அடைக்கலம். பிரார்த்தனை முதலாக எண்பத்தைந்து தலைப்புகளில் கண்ணி, விருத்தம், ஆனந்தக் களிப்பு, கும்மி, வெண்பா, பதிகம், மாலை ஆகிய பல வகைகளில அரபுத் தமிழில் பாடியளித்துள்ளார்.

ஆயிரம் ஆண்டுக்கால வரலாற்றையுடைய அரபுத்தமிழ் இலக்கியங்களில் பல இன்று உலகின் பல பகுதிகளிலுள்ள