பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

எனத் தன் வருகையின் நோக்கத்தையும் விடைகள் தனக்குப் பூரண மனநிறைவளித்தால் மட்டுமே இஸ்லாத்தோடு இணைய எண்ணியுள்ளதையும் கூற, அதனைச் செவிமடுத்த பெருமானார் அவர்கள்

"இப்படி உரைக்கக் கேட்டங்கு எம்இறசூல்
                                   தாம் சொல்வார்
மெய்ப்புடன் உமக்கு மிக்காய் வேண்டுவ
                                  தெல்லாம் கேளும்
செப்பிடு வித்தை அல்ல திண்மையாய்
                                  உம்மை நாயன்
ஒப்புடன் எம்மைக் கொண்டே உத்தரம்
                                    சொல்லுவிப்பான்"

எனக் கூறி, அப்துல்லா இப்னு சலாமால் விடுவிக்கப்பட்ட வினாக்களுக்கெல்லாம் நபிகள் நாயகம் தக்க விடை கூறி தெளிவுறுத்தினார்கள்.

'ஆயிரமசலா'வில் முப்பது படலங்களில் விடுவிக்கப்பட்ட வினாக்களும் பெருமானாரின் பதில்களும் படிப்போரின் கருத்தைக் கவர்வதோடு சிந்தனையையும் தூண்டுவனவாக அமைந்துள்ளன. இக்சேள்வி-பதில்கள் மூலம் இஸ்லாமிய நெறியின் பல்வேறு சிறப்பம்சங்களையும் தீனெறியின் நுட்பங்களையும் படிப்பவர்களால் இனிதுணர்ந்து இன்புற முடிகிறது. இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்களை தத்து வார்த்தமாக, வரலாற்று அடிப்படையில் சுவையாகச் சொல்லிச் செல்வதால் இந்நூல் நீதிக் களஞ்சியமாகவும் அமைந்துள்ளதெனலாம்.

அண்ணலார் இறைச் செய்தியை வஹீயாய் பெற்று மக்களுக்கு உரைத்து, உரைத்தவாறு தானும் வாழ்ந்து. இறைவனின் அழகிய முன் மாதிரியாக வாழ்ந்து காட்டும் பெற்றியினர் என்பதை அறிந்த அப்துல்லா இப்னு சலாம்,