பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61

கிஸ்லா இலக்கியங்கள்

இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள், தமிழுக்குப் புதிதாக வழங்கியுள்ள மற்றொரு இலக்கிய வகை 'கிஸ்ஸா' இலக்கியங்களாகும். 'கஸஸ்' எனும் அரபிச் சொல்லினடியாகப் பிறந்தது 'கிஸ்ஸா’ எனும் சொல் இச்சொல்லுக்குக் 'கதை கேட்டல்’ என்பது பொருளாகும்.

சாதாரணமாகக் கதை கேட்பது என்பது மனித இயல்பாகும். உழைக்கும் மக்கள் தங்கள் களைப்புத் தீர ஓய்வு நேரங்களில் கதை கேட்பதும் அதனை மனதுள் அசை போட்டு ரசித்து மகிழ்வதும் இயற்கை. இக்கதைகள் கேட்போரிடையே சிரிப்போடு சிந்தனையையும் தூண்டுவதாக இருந்தால் அது மிகு நலம் பயப்பதாக அமையும். இவ் வகையில் தமிழில் அமைந்தனவே. கிஸ்ஸா’ இலக்கியங்கள்' அரபி மொழியில் அமைந்துள்ளவை போன்றே தமிழில் உள்ள கிஸ்ஸா இலக்கியங்கள் சுவையாகக் கதை கூறு வதோடு அமையாது தீன் நெறி அடிப்படையில் வாழ் வியல் நெறிமுறைகளை நுட்பமாகவும் எடுத்துக் கூறி மக்களிடையே இஸ்லாமிய ஞானத்தைப் பெருக்கும் வகையில் பெரும்பணியாற்றியுள்ளன என்பது மறுக்க முடியாத உண்மையாகும்

அராபிய மக்களை தன் பால் ஈர்த்தது போன்றே தமிழில் உருவான கிஸ்ஸா இலக்கியங்களும் மக்களிடையே குறிப்பாக இஸ்லாமியர்களிடையே மிகுந்த செல்வாக்குப் பெற்ற இலக்கிய வகையாக நிலை பெற்று வளர்ந்து தமிழையும் இஸ்லாத்தையும் வளர்ந்தன, வளப்படுத்தின எனக்கூறலாம். மசலா இலக்கியங்களையும்விட மக்களிடையே மிக அதிக அளவில் செல்வாக்குப் பெற்றுள்ளனவாகக் கிஸ்ஸா இலக்கியங்கள் விளங்குகின்றன இதற்கு இரு முக்கியக் காரணங்கள் உண்டு. முதலாவது, தமிழில் உள்ள