பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

கிஸ்ஸா இலக்கியங்களில் பெரும்பாலானவை இஸ்லாமிய வரலாற்றுப் போக்கில் பளிச்சிடும் முக்கிய சமபவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுந்துள்ளன. மீதமுள்ள கிஸ்ஸா இலக்கியங்கள் வரலாற்றுத் தொடர்பற்று ஆதாரமற்ற சமபவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருந்த போதிலும் அவை ஏதேனும் ஒருவகையில் இஸ்லாமிய நெறியின் அடிப்படையில் அல்லது தின் நெறிக்கு விளக்கம் தரும் வகையில் சம்பவங்களையோ அல்லது பாத்திரப்படைப்புகளையோ கொண்டு விளங்குவனவாக அமைந்துள்ளன. இவ்வாறு தமிழில் எழுதப் பட்டுள்ள கிஸ்ஸா இலக்கியங்கள் இருபத்தைந்துக்கு மேல் இருப்பதாகக் கூறப்படுகிறது.

வரலாற்று அடிப்படையில் எழுந்த கிஸ்ஸா இலக்கியப் படைப்புகள் நபிமார்கள் வலிமார்கள் வரலாற்றை முழுமையாகக கூறவில்லையெனினும், அவர்தம் வாழ்வில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகளை அடித்தளமாகக் கொண்டு எழுந்துள்ளன. இவை இஸ்லாமிய நெறிகளை அவர்தம் வாழ்க்கை வழியே விரித்துரைப்பதாகக் அமைந்துள்ளன. இவ்வகையில் தமிழில் சுமார் பதினெட்டு இலக்கியங்கள் இயற்றப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்களால் கணிக்கப்பட்டுள்ளது. இவற்றைத் தவிர்த்து மீதமுள்ள கிஸ்ஸா இலக்கியங்கள் மார்க்க ஞானத்தைப் புகட்டுவனவாக அமைந்துள்ளன. இவற்றில் ஆதாரபூர்வமான வரலாற்றுச் சம்பவங்கள் ஏதும் இடம் பெற்றதாகத் தெரியவில்லை.

கிஸ்ஸா இலக்கியங்களின் வடிவ அமைப்பு எவ்வகையானது என்பதை அவ்வளவு எளிதாக கணிக்க இயலவில்லை. எனினும், தமிழில் உள்ள கிஸ்ஸா இலக்கியங்கள் சில செய்யுள் நடையில், சில உரை நடை வடிவிலும் இன்னும் சில செய்யுள், உரை நடை கலந்த போக்கிலும் அமைந்துள்ளன.