பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

97

இஸ்லாமியத் தமிழ்க் காப்பிய உலகில் தன்னிகரற்ற நான்கு காப்பியங்களை இயற்றி, புலவர் நாயகமாக விளங்கும் சேகனாப் புலவர் எனப்படும் செய்கு அப்துல் காதர் லெப்பை ஆலிம் புலவர் அவர்களும் முகியித்தீன் புராணம் எனும் செஞ்சொல் இஸ்லாமியக் காவியத்தை இயற்றிய பதுருத்தீன் புலவரும் மற்றும் சில இஸ்லாமியக் காப்பியப் புலவர்களும் கூட தங்கள் கைவண்ணத்தை முனாஜாத்துப் பாடல்களில் காட்டத் தவறவில்லை.

ஒருமுறை சென்னை நகரில் கொடிய விஷபேதி நோய் பரவி மக்களை அலைக்கழித்தது. நோயின் கடுமையால் மக்கள் மிகுந்த துயருக்குள்ளாயினர். அப்போது சென்னையில் இருந்த பெரும் முஸ்லிம் தமிழ்ப் புலவரான புலவர் நாயகம் சேகனாப் புலவர் அவர்களை முஸ்லிம்கள் அணுகி, விஷபேதி நோயின் கொடுமையொழிய இறைவனை இறைஞ்சி முனாஜாத்துப் பாடி, தங்களை துயரினின்றும் காக்குமாறு வேண்டினர். இன்னலுறும் மக்களின் நல்வாழ்வுக்கு அருள் செய்யுமாறு அல்லாஹ்வை நோக்கி இறைஞ்சும் வகையில் "ஹக்கு பேரில் முனாஜாத்து" எனும் பெயரில் ஒரு முனாஜாத்து நூலை இயற்றியளித்தார். இதிலுள்ள பாடல்கள் அனைத்தும் அல்லாஹ்வை நோக்கித் துதித்துப் பாடப்பட்டவைகளாகும். 'ஹக்கு' என்ற அரபுச் சொல்லுக்கு "உண்மை" என்பது பொருளாகும். உண்மையானவனாகிய அல்லாஹ் மனித குலத்துக்குத் தந்தருளியுள்ள பேறுகளைப் புகழ்ந்தேத்தும் வகையில் இம்முனாஜாத்தின் முதல் பாடல் அமைந்துள்ளது.

"காவலாய் நிற்கும் வல்லோன்
     கத்தனாய்ச் சீவனெல்லாம்
ஆவலாய்ப் போற்றி வாழ்த்தி
    அதற்குணவளித்த கோமான்