பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

வல்லிக்கண்ணன்


எனினும் இவற்றிலிருந்தும் ஆக்க பூர்வமான விளைவுகள் எழலாம் என்ற ஒரு மெல்லிய நம்பிக்கையுடன்தான் இவை பிரசுரமாகின்றன. இவற்றில் வெளிப்படையாகத் தொனிக்கும் காழ்ப்புணர்ச்சிகளை விலக்கி விட்டு முக்கிய விஷயத்தை அணுகிப் புரிந்துகொள்ளுமளவு தீவிரம் தன் வாசகர்களிடையே இருக்கும் என்பது பிரக்ஞை'யின் எதிர்பார்ப்பு” (பிரக்ஞை ).

ஞானக்கூத்தனுக்கு ஆதரவாக சா. கந்தசாமி 'போலி விமர்சனமும் போலிக் கவிதையும்' என்ற கட்டுரையை எழுதினார். ஞானக்கூத்தன் கூறிய சில குற்றச்சாட்டுகளை மறுத்து சுந்தர ராமசாமி 'ஒன்றும் நாலும்' என்ற தலைப்பில் எழுதினார்.

'கவிப் பொருளும் சப்தவாதமும்' என்று தருமு ஔரூப் சிவராம் எழுதியதையும் 'பிரக்ஞை' பிரசுரித்தது. ஞானக்கூத்தனைத் தாக்கி வெ. சாமிநாதன் 'ஒரு தயாரிப்புக் கவிஞர்' என்றொரு கட்டுரை எழுதினார். அதில் 'தமிழவன்' எஸ். கார்லோஸ் பற்றிய பிரஸ்தாபம் கலக்கப்பட்டிருந்தது. அதனால் எஸ். கார்லோஸ் 'இன்னொரு பார்வை’ எனப்பதில் எழுதினார்.

இந்த விவகாரம், 'பிரக்ஞை'யே குறிப்பிட்டதுபோல, பழங்குப்பையைக் கிளறும் வேலையாகத்தான் அமைந்தது. பிரக்ஞை 19 வது ஏட்டில் மீண்டும் இவ்விவாதம் குறித்து ஒரு நீண்ட தலையங்கம் எழுதியது :

“இந்த விவாதங்களில், நேரில் விசாரித்துக் கொள்ளக் கூடியவைகளும் சந்தியில் விசாரிக்கப்படுகின்றன. ஆனால் ஒன்று முதல் ஆசாமி தன் ரஹஸ்ய சந்தேகத்தை துணிச்சலுடன் (?) சந்தியில் வைத்து விடுவதனால் எதிர் ஆசாமியும் களத்தில் சந்திக்க வேண்டியது நேர்கிறது. தவிர, இதில் பல விஷயங்களை நேருக்கு நேர் சம்பவங்கள் நடக்கும்போதே கேட்டு விளங்கிக் கொள்ளாத கூச்ச சுபாவம் படைத்தவர்கள், திராணியில்லாதவர்கள் நிறைய இருக்கிறாற் போல் தெரிகிறது

இப் பொதுமேடையில் நாம் யாவரும் உறுப்பினர்கள். நமக்குள் பல பேரை தனித்தனிக் கூடுகளாக இனம் காணப்போகிறோமா? இது கூடுகிற காரியந்தானா?

பல பேரை தனித் தனிக் கூடுகளாக இனம் காணும் வேலையை 'பிரக்ஞை' யும் தொடர்ந்து செய்துகொண்டிருக்க வேண்டுமா? இப்போது