பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

வல்லிக்கண்ணன்


மௌனமாகவோ அல்லது அந்த க்ஷணத்தில் தோன்றியது மாதிரி ஏதேனும் சொல்லி உள்ளூர வருந்தியோ ஒதுங்கியிருக்கிறேன். இதற் கெல்லாம் பதிலை ஒரு Theory ஆக evalute பண்ண முடியாது என்றே எண்ணுகிறேன். இன்று சிலாகிக்கப்படுகிற இலக்கியக் கொள்கைகளில் பல, இன்னுமொரு நாள் பரிதாபகரமாக வீழ்ச்சியடைந்து போகிற வளர்ச்சி இருக்குமென நம்புகிறேன்.”

ஐந்து இதழ்கள் சாதாரணமாக வந்தபிறகு, பத்திரிகையின் அமைப்பிலும் உள்ளடக்கத்திலும் சிறப்பான முன்னேற்றங்கள் காட்ட விரும்பினார் உமாபதி. இது 'தெறிகள்' புதிய பரிணாமத்தில் புலனாயிற்று.

‘காலாண்டு இதழ்-1' என்று குறிக்கப் பெற்றுள்ள இதழ் எந்த வருஷம் எந்த மாதம் தயாராயிற்று எனத் தேதியிடப் பெறவில்லை. இது ஒரு சிறப்பு மலர் போலவே அமைந்துள்ளது.

“தெறிகளின் பரிணாம வளர்ச்சியில் இந்த இதழ் ஒரு முக்கியமான Phase ன் துவக்கம். கடந்த ஐந்து இதழ்களில் 'தெறிகள்' என்ன சாதித்திருக்கிறது என்று புள்ளி விவரம் எடுத்துப் பார்ப்பது எப்படி உபயோகமில்லாத விஷயமோ அதேபோல் புதிய ‘தெறிகள்' என்ன சாதிக்க இருக்கிறது என்று பட்டியல் தருவதும்.

இதெல்லாம் முக்கியமல்ல.

தமிழில் நவீன இலக்கியம் வளர்ச்சியின்றித் தேங்கிப் போய்விட்டது என்பதில் வாதப்பிரதிவாதங்கள் இருக்கலாம். இது எந்த மொழியிலும் எப்பொழுதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும். அப்படி நிகழ்தலே வளர்ச்சியின் அடையாளம்.

தமிழில் சிறு பத்திரிகைகள் கணிசமான அளவிற்குத் தோன்றிவிட்டன, 'தெறிகள்' ஈறாக இவைகள் declare செய்கிற அல்ல-தருகிற விஷயங்களை வைத்தே வளர்ச்சியின் தன்மை உருவாகும். யாரும் அவசரம் கொள்ள வேண்டாம். உள்ளேயும் வந்தாகிவிட்டது. திரைகளும் தூக்கப்பட்டுவிட்டன. இனி நடப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பதே முறை. காட்சி மாற்றங்களின்போது பேசிக் கொள்வோம்.”

இப்படி உமாபதி அறிவித்திருந்தார்.

90 பக்கங்கள் (அட்டை தனி ) கொண்ட இந்த இதழில் சம்பத் எழுதிய 'இடைவெளி' (குறுநாவல்) 42 பக்கங்களும், கலாப்ரியாவின் ‘சுயம்வரம்' (குறுங்காவியம்) 28 பக்கங்களும் வந்துள்ளன. இவை இரண்டுமே சோதனை ரீதியான படைப்பு முயற்சிகளாகும்.