பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

வல்லிக்கண்ணன்


நாங்கள் உடன் நடக்க சம்மதம்தான். கண நேரத்தில் மறையும் கடற்கரை சுவடாக இல்லாமல் காலம் காலமாக நிலைபெறும் கல்வெட்டுச் சுவடாக அமைய நீங்களும் உதவுங்கள".

இந்த நல்ல நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட சுவடு, கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம் முதலிய படைப்புகளில் அக்கறை காட்டியது.

முதல் இதழில் புவியரசு, மு. மேத்தா, நா. விச்வநாதன் கவிதைகள் இடம் பெற்றிருந்தன.

‘கடலில் பெய்த மழை' என்றொரு கதை அகல்யா எழுதியது.

க. துரைப்பாண்டியன் 'நினைத்துப் பார்ப்பது நல்லது' என்ற கட்டுரையில் புதிய எழுத்தின் உத்தி, நடை, புரிதல் போன்ற பல விஷயங்கள் பற்றி சிந்திக்க வைக்கும் எண்ணங்களை எழுதியிருந்தார். பத்திரிகைகளில் வந்த எழுத்துக்கள், எழுத்தாளர்களின் போக்குகள் சம்பந்தமான சில கருத்துக்களை அக் கட்டுரை வெளியிட்டது. முடிவாகக் கட்டுரையாளர் கூறியுள்ள வேண்டுகோள், எழுதுகிறவர்கள் தங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய நல்ல எண்ணம் ஆகும். அந்தப் பகுதி இது தான்-

“என்னுடைய கவலையெல்லாம் எழுத்தாளனின் எண்ணங்கள் வாசகனுக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதுதான். நாகரிகமாக எழுதுங்கள். உங்கள் எழுத்துக்களில் நளினம் நடமாடட்டும். கனமான செய்திகள் என்று கூறி புரியாமல் எழுதாதீர்கள். மூளை வலிக்கிறது. உங்கள் படைப்புக்களை கருவறைத் தெய்வமாக்காதீர்கள். கோபுரக் கலசமாக்குங்கள். உங்கள் சிந்தனைகளை வடமொழிச் சுலோகங்களாக்காமல் நாட்டுப் பாடல்களாக்குங்கள். என்ன எழுதுகிறோம் என்று அலட்டிக் கொள்ளும் நவீன இலக்கியவாதிகள் எப்படி எழுதுகிறோம் என்றும் நினைத்துப் பார்ப்பது நல்லது.”

இது தவிர, 'வெங்கட்சாமிநாதனின் இலக்கியப் பார்வை' பற்றி பாலா எழுதிய கட்டுரையும் இருந்தது.

'குறிப்புகள்' என்ற தலைப்பில், முக்கிய நிகழ்ச்சிகள் அல்லது குறிப்பிடத்தகுந்த தகவல்கள், செய்திகள்-அவற்றின் மீது குத்தலான அல்லது நகைச்சுவை பொருந்திய குறிப்புரைகள் தரப்பட்டன.