பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

3


பத்திரிகை போடுறானே- நாமும் நம்ம ஊரிலேயே ஒரு பத்திரிகை நடத்தலாமே என்ற தினவினாலும் இன்னோரன்ன பலதரப்பட்ட உந்துதல்களினாலும் சிறு பத்திரிகைகள் தமிழில் பிறந்துள்ளன; பிறக்கின்றன. சில சீசன்களில் அதிகமாகவும் சில காலகட்டங்களில் அபூர்வமாகவும் தலைகாட்டுகின்றன. எப்படியோ, எல்லாக் காலத்திலும் இந்தவித முயற்சிகள் நடந்து கொண்டுதான் வருகின்றன.

இவ்வித முயற்சிகளில் பெரும்பாலானவற்றையும் கவனிக்கையில், அவற்றில் அநேகம் பேப்பர் வியாபாரிக்கும், அச்சாபீஸ்காரருக்கும், பிசினஸ் தேடிக் கொடுத்த முயற்சிகளாகவே முடிந்துள்ளதை உணர இயலும். பல, காகிதத்துக்கும் காசுக்கும், மனித உழைப்புக்கும் நேரத்துக்கும், படிப்பவரின் காலத்துக்கும் ஏற்பட்ட நஷ்டங்கள் கேடுகள் என்று கணக்கிடப் பெறவேண்டிய தன்மையில்தான் உள்ளன.

இலக்கியத்தில் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும், கனமான சிந்தனைகள் பரவுவதற்கும், திறமைசாலிகள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கும்- இப்படிப்பட்ட பல முயற்சிகளுக்கும் சிறு பத்திரிகைகள் நன்கு உதவ முடியும் உதவியும் இருக்கின்றன.

சிலருடைய திறமை முளையிட்டு புஷ்டியோடு வளர்வதற்குத் துணை புரியும் நாற்றங்கால்களாகச் சிறு பத்திரிகைகள் விளங்கியிருப்பதையும் வரலாறு காட்டுகிறது. -

இலக்கியத்துக்கு மட்டுமல்லாது, பல்வேறு கலைகளுக்கும் அறிவியல் துறைகளுக்கும் அரசியல், பொருளாதாரம் மற்றும் தொழில் பிரிவுகளுக்கும் சிறு பத்திரிகைகள் தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றன.

ஆனாலும், தமிழில் சிறு பத்திரிகைகள் என்ற தலைப்பில் நான் இலக்கியப் பத்திரிகைகளை மட்டுமே கவனத்தில் கொள்கிறேன்.

இவ்வாறு எல்லையை வெகுவாகக் குறுக்கிக் கொண்டு விட்டாலும் கூட, இதைக் குறைவறச் செய்து முடிப்பது சிரமங்கள் நிறைந்த காரியமே ஆகும். தமிழ்ப் பத்திரிகைகளின் முறையான வரலாறு எதுவும் தொகுத்து எழுதப்படவில்லை. பலவிதமான பத்திரிகை முயற்சிகள் பற்றிய குறிப்புகளும் கிடைக்க வழியில்லை. பத்திரிகைகளைச் சேகரித்துப் பாதுகாக்கும் நிறுவனங்கள், நிலையங்களும் தமிழ்நாட்டில் இல்லை.

புகழ்பெற்ற நூல் நிலையங்கள்கூடத் தமிழ்ப் பத்திரிகைகளை நல்ல முறையில் பாதுகாத்து வைக்கவுமில்லை. வரலாற்றுச் சிறப்புப் பெற்ற